தலைப்புச் செய்திகள்

போரை விமர்சித்து ஜப்பானிலிருந்து அனுப்பப்பட்ட அறிக்கையை, படிக்காமலேயே இஸ்ரேல் திருப்பி அனுப்பியது

ஈரானுக்கு எதிராக அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்தி வருகின்ற போரை விமர்சித்து, அணுகுண்டு தாக்குதலில் இருந்து தப்பியவர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் நான்கு குழுக்கள் அனுப்பி வைத்த அறிக்கையை, ஜப்பான் – டோக்கியோவில் உள்ள இஸ்ரேலிய தூதரகம் ஏற்க மறுத்து, அதனை திருப்பி அனுப்பி வைத்துள்ளது.

நாகசாகி அணுகுண்டு தாக்குதலில் இருந்து தப்பியவர்கள் மன்றத்தை மேற்கோள் காட்டி, வெளியிடப்பட்ட செய்தியில்; அந்த அறிக்கை நாகசாகி மாகாணத்தில் உள்ள அந்தக் குழுக்களிடமே தபால் நிலையத்தால் திருப்பி அனுப்பப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், தூதரகம் அதை ஏற்க மறுக்கிறது என்று தபால் நிலையம் கூறியதாக அந்தச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“அந்த ஆவணம் படிக்கப்படாமலேயே திருப்பி அனுப்பப்பட்டது. அவர்கள் குறுகிய மனப்பான்மை கொண்டவர்களாக மாறி வருகிறார்கள் என்று நான் நினைக்கிறேன்” என்று, அந்த மன்றத்தின் 85 வயதான தலைவர் ஷிகெமிட்சு தனகா கூறியுள்ளார்.

இரண்டாம் உலகப் போரின் இறுதி நாட்களில், ஹிரோஷிமாவுடன் சேர்ந்து நாகசாகியும் அமெரிக்காவின் அணுகுண்டுத் தாக்குதலால் பேரழிவுக்கு உள்ளானது.

அமெரிக்க குண்டுவீச்சுகளில் இருந்து தப்பியவர்கள், அணு ஆயுதங்களுக்கு உலகளாவிய தடை விதிக்கக் கோரிப் போராடி வருகின்றனர்.