தலைப்புச் செய்திகள்

சவூதி விமானப்படைத் தளம் மீது ஈரான் நடத்திய தாக்குதலில், அமெரிக்க ராணுவத்தினர் 15 பேருக்கு காயம்

சவூதி அரேபியாவிலுள்ள ஒரு விமானப்படைத் தளத்தின் மீது ஈரான் நடத்திய தாக்குதலில் – குறைந்தது 15 அமெரிக்க ராணுவத்தினர் காயமடைந்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

நேற்று வெள்ளிக்கிழமை பிரின்ஸ் சுல்தான் விமானப்படைத் தளத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதலில், குறைந்தது 06 பாலிஸ்டிக் ஏவுகணைகளும் 29 ஆளில்லா விமானங்களும் பயன்படுத்தப்பட்டதாக அசோசியேட்டட் பிரஸ் கூறியுள்ளது.

காயமடைந்த ஐந்து அமெரிக்க ராணுவத்தினர் கவலைக்கிடமான நிலையில் இருப்பதாக, இந்தத் தாக்குதல்கள் குறித்து தகவல் அறிந்த பெயர் குறிப்பிடப்படாத வட்டாரங்களை மேற்கோள் காட்டி ஏபி செய்தி வெளியிட்டுள்ளது.

அந்தத் தளம் தாக்கப்பட்டபோது ராணுவத்தினர் அங்குள்ள ஒரு கட்டிடத்திற்குள் இருந்தனர். இது குறித்து அடையாளத்தை வெளிப்படுத்தாத அமெரிக்க அதிகாரி ரொய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் கூறுகையில்; குறைந்தது 12 வீரர்கள் காயமடைந்ததாகவும், அவர்களில் இருவர் படுகாயமடைந்ததாகவும் குறிப்பிட்டார்.

சவூதி தலைநகர் ரியாத்திலிருந்து சுமார் 96 கி.மீ (60 மைல்கள்) தொலைவில் உள்ள இந்தத் தளம், அரச சவூதி விமானப்படையால் நிர்வகிக்கப்படுகிறது, ஆனால் அமெரிக்கப் படைகளாலும் பயன்படுத்தப்படுகிறது.

பிப்ரவரி 28 அன்று இஸ்ரேலுடன் இணைந்து நடத்திய கூட்டுத் தாக்குதலில் தொடங்கிய தன் மீதான அமெரிக்கத் தாக்குதல்களுக்கு, வளைகுடா நாடுகள் ஏவுதளமாகச் செயல்படுவதாகக் குற்றம் சாட்டி, ஈரான் அந்த நாடுகள் மீது பதிலடித் தாக்குதல்களைத் தொடர்ந்து நடத்தி வருகிறது.