தலைப்புச் செய்திகள்

போரில் இணைந்தனர் ஹுதிகள்: இஸ்ரேல் மீது இன்று தாக்குதல் ஆரம்பம்

யெமனின் ஹூதி படையினர், இஸ்ரேல் மீது – கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளை வீசித் தாக்குதல் நடத்தியுள்ளனர். ஈரானுக்கு எதிரான அமெரிக்க – இஸ்ரேல் போர் தொடங்கியதன் பின்னர், அவர்கள் நடத்திய முதல் தாக்குதல் இதுவாகும்.

ஹூதிகளின் ராணுவ செய்தித் தொடர்பாளர் பிரிகேடியர் ஜெனரல் யஹ்யா சரீ, இன்று (28) சனிக்கிழமை, அல்-மசிரா செயற்கைக்கோள் தொலைக்காட்சியில் இந்தத் தாக்குதலை அறிவித்தார்.

“இலக்குகள் அடையப்படும் வரையிலும், அனைத்து முனைகளுக்கும் எதிரான ஆக்கிரமிப்பு நிறுத்தப்படும் வரையிலும் தாக்குதல்கள் தொடரும்” என்று சரீ கூறியுள்ளார்.

இந்த நிலையில் ஓர் ஏவுகணையை இடைமறித்ததாக இஸ்ரேலிய ராணுவம் கூறியுள்ளது.

மத்திய கிழக்கை உலுக்கி, உலகப் பொருளாதாரத்தை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ள இந்தப் போரில் ஹுதிகள் இணைவார்கள் என்று, வெள்ளிக்கிழமை சரீ சமிக்ஞையாகத் தெரிவித்த சில மணிநேரங்களுக்குப் பிறகு இந்தத் தாக்குதல் நடந்தது.

தெற்கு இஸ்ரேலில் உள்ள முக்கியமான இஸ்ரேலிய ராணுவத் தளங்கள் என்று அவர் விவரித்த இடங்களைக் குறிவைத்து, ஹுதிகள் தொடர்ச்சியான பாலிஸ்டிக் ஏவுகணைகளை வீசியதாக அவர் கூறினார்.

ஈரானும் ஹிஸ்புல்லாவும் இரவு முழுவதும் இஸ்ரேல் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தியதால், வெள்ளிக்கிழமை இரவு முதல் சனிக்கிழமை அதிகாலை வரை பீர் ஷீபா மற்றும் இஸ்ரேலின் முக்கிய அணு ஆராய்ச்சி மையத்திற்கு அருகிலுள்ள பகுதியில் மூன்றாவது முறையாக எச்சரிக்கை ஒலிகள் ஒலித்தன.

ஹூதிகள் 2014 முதல் யெமனின் தலைநகரான சனாவைத் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர். மேலும் இதுவரை அமெரிக்க-இஸ்ரேல் போரில் இருந்து விலகியே இருந்தனர்.

இஸ்ரேல்-ஹமாஸ் போரின் போது, ​​கப்பல்கள் மீது ஹுதிகள் நடத்திய தாக்குதல்கள், செங்கடலில் வணிகப் போக்குவரத்தை சீர்குலைத்தன. இதன் வழியாக ஆண்டுதோறும் சுமார் 01 டிரில்லியன் டொலர் மதிப்புள்ள பொருட்கள் கடந்து சென்றன.

ஹூதி கிளர்ச்சியாளர்கள், நொவம்பர் 2023 முதல் ஜனவரி 2025 வரை, 100-க்கும் மேற்பட்ட வர்த்தகக் கப்பல்களை ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்கள் மூலம் தாக்கினர். இதில் இரண்டு கப்பல்கள் மூழ்கடிக்கப்பட்டன, நான்கு மாலுமிகள் கொல்லப்பட்டனர்.