
சில குழுக்கள் உண்மையான பிரச்சினைகளிலிருந்து திசைதிருப்ப, பல்வேறு பிரச்சினைகள் மற்றும் இடையூறுகளை உருவாக்க முயற்சிப்பதாக ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க தெரிவித்தார்.
“நாங்கள் அந்த பொறிகளில் விழ மாட்டோம்” என்றும், அவர் கூறினார்.
தங்காலை பொது மைதானத்தில் இன்று (20) நடைபெற்ற போதைப்பொருள் அச்சுறுத்தலைத் தோற்கடிப்பதற்கான ‘முழு நாடுமே ஒன்றாக’ தேசியப் பணியின் தென் மாகாண நிகழ்ச்சி நிரலை அறிமுகப்படுத்தும் நிகழ்வில் ஜனாதிபதி திசாநாயக்க கலந்து கொண்டு பேசும் போது – இதனைக் கூறினார்.
போதைப்பொருள் அச்சுறுத்தலுக்கு குழந்தைகள் பலியாவதைத் தடுப்பதே தனது குறிக்கோள் என்றும், எந்தவொரு குற்றவாளிக்கும் அரசியல் பாதுகாப்பு வழங்காத ஒரு அரசாங்கம் இப்போது அமைக்கப்பட்டுள்ளது என்றும் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க இதன்போது குறிப்பிட்டார்.
போதைப்பொருள் வலையமைப்புடன் தொடர்புடைய ஒரு குற்றவாளி அல்லது தனிநபருக்கு கூட அரசியல் பாதுகாப்பு கிடைக்காது என்று அவர் மேலும் கூறினார்.
மக்கள் தற்போதைய அரசாங்கத்திற்கு ஒரு ஆணையை வழங்கியுள்ளதாகவும், மக்களின் எதிர்பார்ப்புகளையும் அபிலாஷைகளையும் நிறைவேற்றுவதற்காக நாடு தழுவிய போதைப்பொருள் எதிர்ப்பு பிரச்சாரம் தொடங்கப்பட்டதாகவும் ஜனாதிபதி அங்கு குறிப்பிட்டார்.
சில நபர்கள் பல்வேறு பிரச்சினைகளை உருவாக்குவதன் மூலம் அரசாங்கத்தின் நிகழ்ச்சி நிரலை சீர்குலைக்க முயற்சிப்பதாகவும், அவர்கள் உண்மையான பிரச்சினையை மூடிமறைத்து, தாங்களாகவே உருவாக்கிய பிரச்சினைகள் மீது பொதுமக்களின் கவனத்தைத் திருப்ப முயற்சிப்பதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.

“உண்மையான பிரச்சினைகளுக்குப் பதிலாக செயற்கையான பிரச்சினைகளை உருவாக்குவதன் மூலம் அவர்கள் ஏன் சாதிக்க விரும்புகிறார்கள்? அவர்கள் உண்மையான பிரச்சினைகளை மூடிமறைத்து, மக்களை செயற்கையான பிரச்சினைகளை நோக்கி வழிநடத்த முயற்சிக்கிறார்கள். நாங்கள் அந்த பொறிகளில் விழ மாட்டோம்” என ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.


