தலைப்புச் செய்திகள்

திருகோணமலை விகாரை சர்ச்சை தொடர்பில், அம்பிட்டியே சீலவன்சசிஸ்ஸ தேரர் – நாமல் ராஜபக்ஷ சந்திப்பு

அமரபுர மகா நிகாயவின் கிழக்கு தமன்கடுவ பிரிவின் தலைமை சங்கநாயக்கரும், அந்தப் பகுதியில் உள்ள பல ராஜமகா விஹாரைகளின் விஹாராதிபதியுமான அம்பிட்டியே சீலவன்சசிஸ்ஸ தேரர், நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவை சந்தித்துள்ளார்.

திருகோணமலையில் உள்ள ஸ்ரீ சம்புத்த ஜெயந்தி போதிராஜ விஹாரையில் நேற்று முன்தினம் (16) நடந்த சம்பவம் குறித்து விவாதிக்க, பத்தரமுல்ல – நெலும் மாவத்தையிலுள்ள பொதுஜன பெரமுன தலைமையகத்திற்குச் சென்று, நாமல் ராஜபக்ஷவை அவர் சந்தித்தார்.

ஞாயிற்றுக்கிழமை (16) இரவு கோயிலின் அறப்பாடசாலையில் புத்தர் சிலை நிறுவப்பட்டபோது பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டதை அடுத்து, அம்பிட்டியே சீலவன்சசிஸ்ஸ தேரர் – நாமல் ராஜபக்ஷவை சந்தித்துள்ளார்.

இந்த சம்பவம் பௌத்த சமூகத்திற்குள் சர்ச்சையைத் தூண்டிள்ளதோடு, நேற்று (17) நாடாளுமன்றத்திலும் கடுமையான விவாதத்தை ஏற்படுத்தியது.

1951 தொடக்கம் அந்த இடத்தில் – ஒரு கோயில் இருந்ததாகக் கூறப்படுகிறது. இதனை உண்மைப்படுத்துவதற்காக ஆவணங்களும் உள்ளன.

பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் நாட்டில் நிலவிய காலப்பகுதியில், விகாரை – அந்தப் பகுதியில் அமைந்துள்ள ராணுவ முகாமுக்கு அருகில் மாற்றப்பட்டதாகக் கூறப்படுகிறது.

பழைய அறநிலைப் பாடசாலையின் முன்னாள் மாணவர்கள் இன்னும் திருகோணமலையில் வசிக்கின்றனர் என்று கிராமவாசிகள் குறிப்பிடுகின்றனர்.

2004 ஆம் ஆண்டு ஏற்பட்ட சுனாமியின் போது, அசல் கட்டிடம் முற்றிலுமாக அழிக்கப்பட்டது. அதன் பிறகு அந்த நிலம் கடலோரப் பாதுகாப்பு மற்றும் கடலோர அபிவிருத்தித் திணைக்களத்தின் (CCD) நிர்வாகத்தின் கீழ் வந்தது.

2014 ஆம் ஆண்டில், அப்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, பூஜா பூமி பத்திரம் மூலம் ஸ்ரீ சம்புத்த ஜெயந்தி போதிராஜ விகாரைக்கு 40 பேர்ச் நிலத்தை வழங்கியதாகவும் கூறப்படுகிறது.

நில உரிமை கோயிலிடம் இருந்தாலும், கடலோரப் பாதுகாப்பை கடலோர பாதுகாப்ப, அபிவிருத்தித் திணைக்களம் அதனை நிர்வகிக்கிறது. மேலும் பாதுகாப்புக்காக கோயில் வளாகம் வேலியிடப்பட்டுள்ளது.

பௌத்த விகாரை எதுவும் இல்லை என்று கூறப்படும் நிலையில், அதன் அருகில் ஏற்கனவே ஒரு பெரிய அரச மரமும் குறைந்தது ஒரு புத்தர் சிலையும் இருப்பதாக குடியிருப்பாளர்கள் கூறுகின்றனர்.

முக்கிய தகராறு தம்மப் பள்ளி அல்ல, அதே 40 பேர்ச் சொத்தில் அமைந்துள்ள ஒரு சிறிய கடை என்று குடியிருப்பாளர்கள் கூறுகின்றனர். இந்தக் கடையை திருகோணமலை ஐக்கிய தேசியக் கட்சியின் அமைப்பாளர் தீபானி லியனகேவின் மகள் மற்றும் மருமகன் நடத்தி வந்ததாகக் கூறப்படுகிறது. இருப்பினும் அங்கீகரிக்கப்படாத நிலப் பயன்பாடு தொடர்பாக பொலிஸ் நிலையத்தில் முன்னர் செய்யப்பட்ட முறைப்பாட்டின் பின்னர் கடை அகற்றப்பட்டதாக கிராமவாசிகள் கூறுகின்றனர்.

விகாரைக்கு வருமானத்தைப் பெற்றுக் கொள்வதற்காக, அந்த இடம் தனக்கு குத்தகைக்கு விடப்பட்டதாக, கடையை நடத்தி வந்த எல். திலக் பெரேரா கூறியுள்ளார்.

2014 பத்திரத்தைத் தவிர, அந்த நேரத்தில் எந்த முறையான அனுமதிகளும் இருக்கவில்லை என்றும், ஆரம்ப கட்டுமானம் கம்பங்கள் மற்றும் தற்காலிக கட்டமைப்புகளுடன் தொடங்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

திலக் பெரேராவின் கூற்றுப்படி, அங்கீகரிக்கப்படாத கட்டுமானத்தைக் காரணம் காட்டி வேலையை நிறுத்தி கடலோச பாதுகாப்புத் திணைக்களம் மற்றும் நகராட்சி அதிகாரிகள், பின்னர் – புத்த விவகார அமைச்சு, கடலோச பாதுகாப்புத் திணைக்களம், கடல்சார் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அதிகாரசபை, மத்திய சுற்றுச்சூழல் அதிகாரசபை, நகர சபை மற்றும் வீதி அபிவிருத்தி அதிகாரசபை உள்ளிட்ட நிறுவனங்களிடமிருந்து அனுமதியைப் பெறுமாறு அறிவுறுத்தினர்.

பின்னர் கடலோச பாதுகாப்புத் திணைக்களம் ஒரு அனுமதியை (CCCRN/ADC/6578) வழங்கியதாகவும், ஆனால் 2024 இல் நகர சபை அனுமதிக்கப்பட்ட எல்லைகளை மீறியதற்காக – அவருக்கு எதிராக வழக்குத் தொடர்ந்ததாகவும் அவர் கூறினார். வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.

ஜூலை 2025 இல், மேலும் மீறல்கள் நடந்ததாகக் கூறி, கடலோர பாதுகாப்புத் திணைக்களம் அனுமதியை ரத்து செய்து, கட்டட நிர்மாணத்தை உடனடியாக அகற்ற உத்தரவிட்டது. ஏழு வேலை நாட்களுக்குள் இந்த விஷயத்தை தீர்க்க பொலிஸார் மற்றும் கடலோர பாதுகாப்பு திணைக்கள அதிகாரிகள் விகாரை நிர்வாகத்துடன் ஒரு உடன்பாட்டை எட்டியதாகக் கூறப்படுகிறது. அந்தக் காலம் கடந்த வெள்ளிக்கிழமை (14) முடிவடைந்தது.

அங்கீகரிக்கப்படாத கட்டுமான குற்றச்சாட்டுகள்

இந்த விவகாரத்தை நன்கு அறிந்த ஒரு மூத்த பொலிஸ் அதிகாரி, அனுமதிக்கப்பட்ட சதுர அடிக்கு அப்பால் – அங்கீகரிக்கப்படாத விரிவாக்கம் குறித்த பிரச்சினை மையமாகக் கொண்டுள்ளது என்று கூறினார்.

கடற்கரையோரத்தில் மதம் சார்ந்த அல்லது வேறு எந்த கட்டுமானத்தையும் ஒழுங்குபடுத்த கடலோர பாதுகாப்புச் சட்டங்களின் கீழ் கடலோர பாதுகாப்பத் திணைக்களத்துக்கு அதிகாரம் உள்ளது என்றும், சர்ச்சைக்குரிய கட்டடம் அங்கீகரிக்கப்பட்ட வரம்புகளை மீறிவிட்டது என்றும் அவர் கூறினார்.

அந்த இடத்தில் வைக்கப்பட்ட புத்தர் சிலையை ஞாயிற்றுக்கிழமை அங்கிருந்து கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் எடுத்துச் சென்றனர். ஆயினும், நேற்றுக் காலை – அதே இடத்தில் தாம் கொண்டு சென்ற புத்தர் சிலையை பொலிஸார் கொண்டு வந்து வைத்தமை குறிப்பிடத்தக்கது.

(நன்றி: ஏசியன் மிரர்)