
முன்னாள் பிரதமர் ஒருவருக்கு 2012 மற்றும் 2014 ஆம் ஆண்டுகளில் மருத்துவ சிகிச்சைக்காக ஜனாதிபதி நிதியிலிருந்து 29.8 மில்லியன் ரூபாய் வழங்கப்பட்டது என்றும், அதில் 13.7 மில்லியன் ரூபாய் திரும்பப் பெறக்கூடிய அடிப்படையில் வழங்கப்பட்ட போதிலும், அந்தத் தொகை ஜூன் 2025 வரை வசூலிக்கப்படவில்லை என, கணக்காய்வு அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளது.
56 நாடாளுமன்ற மற்றும் மாகாண சபை உறுப்பினர்களுக்கு 13 கோடியே 13 லட்சத்து 71 ஆயிரத்து110 ரூபாய் மதிப்புள்ள வைத்திய மற்றும் நிதி உதவி வழங்கியமை பற்றி, டிசம்பர் 31, 2024 உடன் முடிவடைந்த ஆண்டிற்கான ஜனாதிபதி நிதியின் கணக்காய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கணக்காய்வில், கேள்விக்குரிய அரசியல்வாதிகளின் பெயர்கள் பட்டியலிடப்படவில்லை.
‘சர்ச்சைக்குரிய தன்மை கொண்ட பரிவர்த்தனைகள்’ என்ற தலைப்பில் பட்டியலிடப்பட்டுள்ள விடயங்கள், கட்டாய தகுதி அளவுகோல்களை போதுமான அளவு கருத்தில் கொள்ளாமல் இந்த பணம் செலுத்தப்பட்டதை வெளிப்படுத்தியுள்ளன.
56 அரசியல்வாதிகளுக்கு உதவி வழங்குவதற்கு முன்பு, தேவையான காரணிகளை முழுமையாக மதிப்பிடத் தவறிவிட்டது என்பதை கணக்காய்வு சோதனைகள் வெளிப்படுத்தியுள்ளன.
நிதி உதவிக்கான முறையான விண்ணப்பங்கள், பெறுநர்களின் வருமான வரம்புகளை சரிபார்த்தல், பிரதேச செயலாளர்களிடமிருந்து அறிக்கைகள், நிதி சொத்துக்களை மதிப்பிடுதல் மற்றும் அனுமதிக்கப்பட்ட வைத்திய உதவியின் அதிகபட்ச வரம்பைப் பின்பற்றுதல் ஆகியவை இதில் கவனிக்கப்படாத விடயங்களாகும்.
இந்த நிலையில் குற்றப் புலனாய்வுப் பிரிவு தற்போது இந்த விஷயத்தை விசாரித்து வருவதாகவும், அதன் முடிவின் அடிப்படையில் பொருத்தமான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் – கணக்காய்வாளர்களுக்கு ஜனாதிபதி நிதியத்தின் நிர்வாகம் தெரிவித்தது. ஏற்கனவே உள்ள சட்டங்கள், விதிகள் மற்றும் விதிமுறைகளுக்கு இணங்க எதிர்கால நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று கணக்காய்வு பரிந்துரைத்துள்ளது.
ஜனாதிபதி நிதிச் சட்டத்தின் கீழ், அத்தகைய கடன்களுக்கு எந்த ஏற்பாடும் இல்லாத போதிலும், ஜனாதிபதி நிதியம் மீட்டெடுக்கக்கூடிய அடிப்படையில் நிதி உதவி வழங்கிய நிகழ்வுகளையும் கணக்காய்வு வெளிப்படுத்தியுள்ளது.
பிப்ரவரி 2, 2015 திகதியிட்ட ஜனாதிபதியின் செயலாளரின் உத்தரவின் பேரில், ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் – திருப்பிச் செலுத்தும் அடிப்படையில் 10.9 மில்லியன் ரூபதய“ வைத்திய உதவியைப் பெற்ற விடயம் இவற்றில் ஒன்றாகும். முன்னாள் பிரதமர் சம்பந்தப்பட்ட விடயத்தைப் போலவே, இந்தத் தொகை ஜூன் 2025க்குள் மீட்கப்படவில்லை.

ஜனாதிபதி நிதியம் அதன் வளங்களை வறுமை ஒழிப்பு, கல்வி மற்றும் மத முன்னேற்றம் மற்றும் தேசத்திற்கு சேவை செய்த நபர்களுக்கு வெகுமதி அளிப்பது போன்ற நோக்கங்களுக்காக மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்று கணக்காய்வு மீண்டும் வலியுறுத்தியுள்ளது. திரும்பப் பெறக்கூடிய கடன்கள் அல்லது அங்கீகரிக்கப்படாத நிதி சலுகைகளை வழங்க முடியாது எனவும் அது சுட்டிக்காட்டியுள்ளது.


