
ஊழல் வழக்கில் குற்றவாளிகளாக தீர்ப்பளிக்கப்பட்டு, தண்டனை அனுபவித்து வருகின்ற – முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே மற்றும் லங்கா சதோச நிறுவனத்தின் முன்னாள் தலைவர் நளின் பெனாண்டோ ஆகியோர் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுக்களை ஜனவரி 20 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ள உச்ச நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.
இந்த மேல்முறையீட்டு மனுக்கள் இன்று (28) பிரதம நீதியரசர் பிரீதி பத்மன் சூரசேன தலைமையிலான உச்ச நீதிமன்றத்தின் மூன்று நீதியரசர்கள் கொண்ட அமர்வு முன்பாக விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன.
மேல்முறையீட்டு மனுக்களை ஜனவரி 20 ஆம் திகதி விசாரணைக்கு பட்டியலிடுமாறு அமர்வு உத்தரவிட்டது.
கொழும்பு மேல் நீதிமன்றம் தண்டனை விதித்த பின்னர் தற்போது மறியலில் வைக்கப்பட்டுள்ள, மேற்படி இருவரையும் இன்று – மனுகள் விசாரணையின் போது சிறை அதிகாரிகள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
2015 ஜனாதிபதித் தேர்தல் காலத்தில் விளையாட்டு உபகரணங்களை இறக்குமதி செய்தமையில் மோசடி செய்தார்கள் எனும் குற்றச்சாட்டில் மஹிந்தானந்த அளுத்கமகேவுக்கு 20 ஆண்டுகளும், நளின் பெர்னாண்டோவுக்கு 25 ஆண்டுகளும் கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

லஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு தாக்கல் செய்த அந்த வழக்கில், மேற்படி இருவரும் விளையாட்டுக் கழகங்களுக்கு விநியோகிப்பதற்காக 14,000 கேரம்போட் மற்றும் 11,000 வரைவு பலகைகளை (draughts boards) இறக்குமதி செய்ததன் மூலம் 2014 செப்டம்பர் 01 முதல் டிசம்பர் 31 வரை 53.1 மில்லியன் ரூபாய் செலவிட்டிருந்தனர்.


