
ஹெரோயின் மற்றும் ‘ஏஸ்’ ஆகிய போதைப் பொருட்களுடன் சந்தேக நபர்கள் இருவரை, அட்டாளைச்சேனையில் வைத்து இன்று (21) அதிகாலை அக்கரைப்பற்று பொலிஸார் கைது செய்துள்ளனர்.
ஹெரோயினுடன் கைதானவர் அக்கரைப்பற்றைச் சேர்ந்தர் என்றும், ஏஸ் போதைப்பொருளுடன் கைதானவர் அட்டாளைச்சேனையைச் சேர்ந்தவர் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
ஏஸ் 320 மில்லிகிராம் (ஏஸ் என்பது கஞ்சாவிலிருந்து தயாரிக்கப்படும் போதைப்பொருள், இது சொக்கலேட் வடிவில் காணப்படும்) மற்றும் ஹெரோயின் 260 மில்லிகிராம் ஆகியவையும் இதன்போது சந்தேக நபர்களிடமிருந்து கைப்பற்றப்பட்டுள்ளன. இவர்கள் போதைப்பொருள் விற்பனை செய்பவர்கள் என விசாரணைகளில் தெரியவந்துள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.

அக்கரைப்பற்று பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த உதவிப் பொலிஸ் பரிசோதகர்கள் யூ.எல்.எஸ். ஆப்தீன் மற்றும் கே. அனுர ஆகியோர் தலைமையிலான குழுவினர், மேற்படி நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
சந்தேக நபர்கள் தற்போது அக்கரைப்பற்று பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் என்றும், நீதிமன்றில் அவர்கள் இன்று ஆஜர்படுத்தப்படுவார்கள் எனவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.



