
இலங்கை புகையிரதத் திணைக்கள ஊழியர்களுக்கு போக்குவரத்து அமைச்சர் – பிமல் ரத்நாயக்க எச்சரிக்கை விடுத்துள்ளார். “சிறந்த சேவையை வழங்குங்கள் அல்லது வெறியேறுங்கள்” என்றும், அவர் ஊழியர்களைக் கேட்டுக் கொண்டார்.
களுத்துறை மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் போக்குவரத்து அதிகாரிகள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் களுத்துறையில் நடைபெற்ற கூட்டத்தில், அவர் இதனைக் கூறினார்.
இலங்கை புகையிரத திணைக்களம் “ஒரு சதவீத முன்னேற்றத்தைக் கூட காட்டவில்லை” என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.
“எங்கள் ரயில்களின் ஜன்னல்களை மூட முடியாது. சில பெட்டிகளில் ஒரு மின்விசிறி கூட இயங்குவதில்லை. காலி – கொழும்பு ரயிலில் சுமார் 2.5 மணி நேரம் பயணிக்கிறது, அங்கு ஒரு கழிப்பறையில் கூட தண்ணீர் இல்லை, பயணிகள் அவதிப்படுகிறார்கள்” என்றும் அவர் குற்றஞ்சாட்டினார்.
ஜா-எலா மற்றும் சீதுவ இடையே உள்ள ஒரு பழுதடைந்த ஜன்னலில் நான்கு வயது குழந்தையின் விரல்கள் நசுக்கப்பட்ட சம்பவம் மிகவும் கவலையளிக்கிறது. “நான் தந்தையிடம் பேசியபோது, அவர் என்னிடம், ‘இது போன்ற ஒரு நாட்டில் வாழ்வதன் பயன் என்ன?’ என்று கேட்டார். அந்தக் கேள்வி என்னைத் துரத்துகிறது” என்றும் அமைச்சர் கூறினார்.

“எனவே மீண்டும் ஒரு மாதத்துக்குள் ஏதாவது ஒரு புதுப்பித்தல் நடைபெற வேண்டும் என்று நான் கூறுகிறேன். இது தொடர்பாக என்ன செய்யப்படும் என்பதை 03 நாட்களுக்குள் எனக்குத் தெரிவிக்க வேண்டும். சேவையை வழங்க வேண்டும் அல்லது வெளியேற வேண்டும் என்று – இலங்கை புகையிரதத் திணைக்களத்தில் உள்ள அனைவரையும் நான் கேட்டுக்கொள்கிறேன். இது இறுதி எச்சரிக்கை” எனவும், அமைச்சர் பிமல் தெரிவித்தார்.



