
இலங்கை அரச துறையில் டிஜிட்டல் கையொப்ப முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அரச அதிகாரிகள், தங்கள் அலுவலகப் பணிகளை நெறிப்படுத்தவும், செயல்திறனை மேம்படுத்தவும் இது வழிவகுக்கும் எனக் கூறப்படுகிறது.
பொது சேவையை டிஜிட்டல் மயமாக்கி, நவீன, திறமையான பாதையை நோக்கி வழிநடத்துவதே அரசாங்கத்தின் நோக்கமாகும் என்று – பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் – பேராசிரியர் சந்தன அபேரத்னே கூறியுள்ளார்.
நேற்று (15) அமைச்சின் பொதுநிர்வாக அதிகாரிகளுக்கு டிஜிட்டல் கையொப்பங்களை அறிமுகப்படுத்தும் நிகழ்வில் அவர் இதனைத் தெரிவித்தார்.
மக்களின் எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்யும் திறமையான பொது சேவையை உருவாக்குவதே தனது நோக்கம் என்றும் அவர் குறிப்பிட்டார்.
இந்தப் புதிய தொழில்நுட்பத்தை கிராம அலுவலர்கள் வரை விரிவுபடுத்த வேண்டும் எனவும் அவர் கூறினார்.

திட்டத்தின் ஒரு பகுதியாக, மாவட்டச் செயலகங்கள் மற்றும் பிரதேச செயலகங்களில் இணைக்கப்பட்டுள்ள அதிகாரிகளின் கையொப்பங்களை டிஜிட்டல் மயமாக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது.
2006 ஆம் ஆண்டின் 19 ஆம் இலக்க மின்னணு பரிவர்த்தனைச் சட்டத்தின் கீழ் இந்த முயற்சி செயல்படுத்தப்படுகிறது. டிஜிட்டல் கையொப்பங்களுக்கான உறுதிப்படுத்தும் அதிகார நிறுவனமாக LankaPay நியமிக்கப்பட்டுள்ளது.
கடிதப் போக்குவரத்தை கையாள்வதில் ஏற்படும் தாமதங்களைத் தடுக்கவும், பொதுமக்களுக்கு விரைவான, அதிக வினைத்திறன் கொண்ட சேவைகளை வழங்கவும் இந்த அமைப்பு உதவும் என்று அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.


