தலைப்புச் செய்திகள்

புதிய மறுசீரமைப்பை ஏற்காத மின்சார சபை ஊழியர்கள் வெளியேறலாம்; 50 லட்சம் வரை நஷ்டஈடு வழங்கப்படும்: அமைச்சர் குமார ஜெயகொடி மீண்டும் தெரிவிப்பு

புதிய மறுசீரமைப்பை ஏற்றுக்கொள்ளாத இலங்கை மின்சார சபை ஊழியர்கள், இழப்பீட்டுடன் வேலையை விட்டுவிடாலம் என்று மின்சக்தி அமைச்சர் குமார ஜெயகொடி தெரிவித்துள்ளார்.

இலங்கை மின்சார சபையின் தற்போதைய நிலைமை குறித்து ​​நேற்று (15) அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட போது, அவர் இதனைக் கூறினார்.

இலங்கை மின்சார சபையை மூடுமளவுக்கு – இழப்பீட்டுத் தொகைகள் உட்பட பல நடைமுறைக்கு மாறான கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் இதன்போது குறிப்பிட்டார்.

இலங்கை மின்சார சபையானது நான்கு முக்கிய நிறுவனங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. அவை உற்பத்தி, பரிமாற்றம், விநியோகம் மற்றும் அமைப்புகள் முகாமைத்துவம் என்பனவாகும். இவற்றின் உரிமை அரசிடம்தான் உள்ளது என, அமைச்சர் விவரித்தார்.

ஊழியர்கள் இந்தப் புதிய நிறுவனங்களில் உள்வாங்கப்படுவார்கள். இணங்காதவர்கள் ராஜினாமா செய்ய வாய்ப்பு கிடைக்கும் என்றும் அமைச்சர் மேலும் கூறினார்.

தானாக முன்வந்து ராஜினாமா செய்யும் ஊழியர்கள் பாகுபாடு இல்லாமல் ரூ. 500,0000 வரை இழப்பீடு கோர தகுதியுடையவர்கள். இலங்கை மின்சார சபை அதன் முந்தைய முறைமையில் தொடர்ந்திருந்தால், ஓகஸ்ட் 27 க்குப் பின்னர் 12,000 ஊழியர்களை வீட்டிற்கு அனுப்ப முடிவு செய்யப்பட்டிருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

இந்த மாதம் 02 ஆம் திகதி அனைத்து தொழிற்சங்கங்களும் அழைக்கப்பட்டு அவர்களின் கோரிக்கைகளுக்குப் பதில்கள் வழங்கப்பட்ட போதிலும், 03 ஆம் திகதி புதிய கோரிக்கைகள் சமர்ப்பிக்கப்பட்டதாகவும் அமைச்சர் கூறினார்.

இந்த நடைமுறைக்கு மாறான கோரிக்கைகள் – மின்சார சபையின்மறுசீரமைப்பு செயல்முறையை சீர்குலைக்கும் நோக்கம் கொண்டவை என்று சந்தேகிக்கப்படுவதாகவும் மின்சக்தி அமைச்சர் குமார ஜெயக்கொடி மேலும் தெரிவித்தார்.

இலங்கை மின்சார சபையில் மேற்கொள்ளப்படும் மறுசீரமைப்புக்கு எதிரானவர்கள், வேலையை விட்டு விடலாம் என, முன்னரும் அமைச்சர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.