
கொமாண்டோ சாலிந்த எனும் பாதாள உலக குற்றவாளிக்கு துப்பாக்கி ரவைகளை வழங்கினார் எனும் குற்றச்சாட்டில், ராணுவத்தின் லெப்டினன்ட் கேர்ணல் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த ராணுவ அதிகாரி முல்லைத்தீவு மாவட்டம் – பாலிநகர் ராணுவ முகாமின் கட்டளை அதிகாரி எனத் தெரிவிக்கப்படுகிறது. இவரை – மேற்கு மாகாண வடக்கு பொலிஸ் குற்றப்பிரிவினர் கைது செய்துள்ளனர்.
இந்தோனேசியா – ஜகர்த்தாவில் கைது செய்யப்பட்ட ‘கொமாண்டோ சாலிந்த’ என்று அழைக்கப்படும் பாதாள உலக குற்றவாளிக்கு ரி-56 துப்பாக்கிகளில் பயன்படுத்தப்படும் 260 ரவைகளை 06 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய்க்கு விற்றதாகக் கூறப்படும் குற்றச்சாட்டில், அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைதான ராணுவ அதிகாரி தற்போது குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் காவலில் உள்ளார்.
ரி -56 துப்பாக்கிகளுக்குப் பயன்படுத்தப்படும் 260 தோட்டாக்களை, கைது செய்யப்பட்ட சந்தேக நபர் 200 மற்றும் 60 தோட்டாக்களாக, இரண்டு தடவை பாதாள உலக நபருக்கு வழங்கியதாகவும், அதற்கு ஈடாக அவர் 650,000 ரூபாயைப் பெற்றதாகவும் தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்ட லெப்டினன்ட் கேணல், 2017 ஆம் ஆண்டு கனேமுல்லவில் உள்ள கொமாண்டோ படைப்பிரிவு தலைமையகத்தில் பணியாற்றியதாகவும், அங்கு ‘கொமாண்டோ சாலிந்த’ அவருக்குக் கீழ் பணியாற்றியதாகவும் கூறப்படுகிறது.
இருப்பினும், கைது செய்யப்பட்ட ராணுவ அதிகாரி, ஒழுக்காற்று பிரச்சினை காரணமாக படைப்பிரிவிலிருந்து நீக்கப்பட்டு, இலகு ரக காலாட் படைப்பிரிவில் பணியாற்ற நியமிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.



