
விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டிலிருந்த வங்கிகளில் மீட்கப்பட்ட 5,000க்கும் மேற்பட்ட தங்கப் பொருட்கள் தற்போது இலங்கை மத்திய வங்கியின் பாதுகாப்பில் உள்ளது என, குற்றப் புலனாய்வுத் திணைக்களம் (சிஐடி) தெரிவித்துள்ளது.
கொழும்பு பிரதம நீதவான் நீதிமன்றத்தில் இந்த விடயத்தை நேற்று (02) சிஐடியினர் கூறினர்.
வடக்கில் இவ்வாறு மீட்கப்பட்ட தங்கத்தின் மதிப்பு – பல நூறு மில்லியன் ரூபாய்கள் என தெரிவிக்கப்படுகிறது.

தங்கம் தற்போது ராணுவத் தலைமையகத்திலுள்ள பெட்டகங்களில் இருப்பதாகவும், தங்கத்தை முறையாக பட்டியலிடுவதற்காக தேசிய ரத்தினக் கல் மற்றும் நகைகள் அதிகார சபையின் (NGJA) தற்காலிக அலுவலகமும் அந்த இடத்தில் அமைக்கப்பட்டுள்ளதாகவும் – கொழும்பு பிரதம நீதவான் அசங்க போதரகமவிடம் சிஐடி கூறியுள்ளது.
எடை மற்றும் மதிப்பீடு போன்ற விவரங்கள் பதிவு செய்யப்பட்டு வருகின்றன. அதே நேரத்தில், நடந்து வரும் வழக்கில் பொருட்கள் ஆவணங்களாக பதியப்பட்டுள்ளன என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு குற்றப் பிரிவின் அதிகாரிகள் ராணுவத் தலைமையகத்திலுள்ள தங்கப் பொருட்களைபுகைப்படம் எடுத்து வருவதாகவும், மத்திய வங்கி அதிகாரிகளும் சரிபார்க்கும் நடவடிக்கைகளில் பங்கேற்கின்றனர் என்றும் சிஐடி மேலும் கூறியுள்ளது.
இராணுவக் காவலில் இருப்பதாகக் கூறப்படும் தங்கக் கையிருப்பு தொடர்பாக, ஏப்ரல் 29, 2025 அன்று ஐஜிபி பிரியந்த வீரசூரிய அளித்த புகாரைத் தொடர்ந்து இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
சிஐடியின் நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவு நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்த பிறகு, தங்கத்தை இருப்பு வைத்து மத்திய வங்கியின் காவலில் மாற்ற உத்தரவிடப்பட்டது.
இராணுவத்தின் காவலில் இருப்பதாகக் கூறப்படும் 80 கிலோவுக்கும் அதிகமான தங்கத்தில், 5,182 பொருட்கள் 3,866 ஆவணங்களின் கீழ் ஆவணப்படுத்தப்பட்டுள்ளன என்று சிஐடி நீதிமன்றத்தில் தெரிவித்தது.
இவை ஏற்கனவே மத்திய வங்கியின் 09 பாதுகாப்பு பெட்டகங்களில் வைக்கப்பட்டுள்ளன.
புகைப்படங்கள் உட்பட விரிவான அறிக்கையையும் – பிரதம நீதவானிடம் சிஐடி சமர்ப்பித்தது.
இது தொடர்பான முன்னேற்றம் குறித்து நீதிமன்றத்திற்கு அறிக்கை அளிக்குமாறு நீதவான் சிஐடிக்கு உத்தரவிட்டார்.



