
ஜனாதிபதியொருவர் தனிப்பட்ட தேவைகளுக்காக வெளிநாடு செல்வதையும் நாட்டிற்குள் ஓர் இடத்திற்குச் செல்வதையும், ஒப்பிட முடியாது என்று வெளியுறவு அமைச்சர் விஜித ஹேரத் கூறினார்.
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் இன்று (27) கலந்து கொண்டு பேசும்போது அவர் இதனைக் கூறினார்.
ஒரு ஜனாதிபதி தனது உத்தியோகபூர்வ வாகனத்தையும் பாதுகாப்பையும் தனிப்பட்ட விஷயங்களுக்குப் பயன்படுத்த முடியாதா? என்று ஊடகவியலாளர் ஒருவர் கேட்டதற்கு, “முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பொது நிதியைப் பயன்படுத்தி பிரித்தானியாவுக்கு தனிப்பட்ட முறையில் சென்றது தவறு” என்று அமைச்சர் விஜித ஹேரத் கூறினார்.

“இலங்கையில் ஒரு இறுதிச் சடங்கில் கலந்துகொள்வது அல்லது நாட்டிற்குள் வேறு எந்த இடத்திற்கும் செல்வதை – விமானத்தில் இருக்கைகளை முன்பதிவு செய்து பயணம் செய்வதுடன் ஒப்பிட முடியாது. அது தவறு” என்று அமைச்சர் அவர் விவரித்தார்.
”அரச ஊழியர்களுக்கு கூட, அவர்களின் தனிப்பட்ட தேவைகளுக்கு அரச வாகனங்களைப் பயன்படுத்த ஒரு குறிப்பிட்ட அமைப்பின் கீழ் ஏற்பாடுகள் வழங்கப்படுகின்றன” என்றும் அவர் குறிப்பிட்டார்.
“இவை சுற்றறிக்கைகளின் கீழ் செய்யப்பட்ட ஏற்பாடுகள். இங்கே கேள்வி என்னவென்றால், பொது நிதியை தவறாகப் பயன்படுத்துவது பற்றியது” என்று அவர் கூறினார்.
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பொது நிதியை தவறாகப் பயன்படுத்துவது தொடர்பான விசாரணை, ஒரு முறைப்பாட்டின் அடிப்படையில் அமைந்ததாகவும், பலரின் சாட்சியங்களைப் பதிவு செய்துள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
“சட்டம் அனைவருக்கும் சமமாகப் பயன்படுத்தப்பட வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பு. இலங்கையில் முதல் முறையாக, மக்கள் இதைப் பார்க்க முடிகிறது. பொதுமக்கள் இதைப் பற்றி குறிப்பாக மகிழ்ச்சியடைகிறார்கள்” என்றும் அவர் தெரிவித்தார்.


