ஊடகவியலாளர் எக்னலிகொட பெல்ஜியத்தில்தான் இருக்கிறார்: பிரதியமைச்சர் மீண்டும் தெரிவிப்பு

🕔 February 25, 2016
Arundika fernando  - 0445காணாமற் போனதாகக் கூறப்படும் ஊடகவியலாளர் பிரகீத் எக்னலிகொட பெல்ஜியம் தலைநகரான பிரசல்ஸில் வாழ்ந்து வருகிறார் என்னும் நிலைப்பாட்டிலேயே, தான் தொடர்ந்தும் இருப்பதாக சுற்றுலா ஊக்குவிப்பு மற்றும் கிறிஸ்தவ விவகார பிரதியமைச்சர் அருந்திக பெனாண்டோ நேற்று புதன்கிழமை தெரிவித்தார்.

இதேவேளை, ராணுவத்தினருக்கு இந்த அரசாங்கத்தில் அபகீர்த்தி ஏற்படும் வகையிலான சம்பவங்கள் இடம்பெற்றால், தான் அரசாங்கத்திலிருந்து பிரிந்து செல்லவும் தயங்கமாட்டேன் என்றும் அவர் கூறினார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தலைமையகத்தில் நேற்று புதன்கிழமை காலை நடத்தப்பட்ட செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போதே பிரதியமைச்சர் மேற்கண்டவாறு கூறினார்.

இச்செய்தியாளர் மாநாட்டில், காணாமல் போனதாக கூறப்படும் பிரகீத் எக்னலிகொட உண்மையில் ஓர் ஊடகவியலாளரா? அவர் எவ்வாறு ஊடகவியலாளர் ஆனார்? போன்ற பல கேள்விகள் சிரேஷ்ட ஊடகவியலாளர் ஒருவரால் எழுப்பப்பட்டது.

இதன்போது பிரதியமைச்சர் மேலும் கூறுகையில்;

“இலங்கை ராணுவம் ரசாயன ஆயுதங்களை பயன்படுத்தி மக்களை கொல்வதாக பிரகீத் எக்னலிகொட என்பவர் பிபிசி செய்திச் சேவைக்கு தகவல் வழங்கி இருந்தார்.

எமது ராணுவத்துக்கு சர்வதேசத்தில் அவப்பெயரை தேடித்தரும் வகையில், தவறான செய்தியை வழங்கியமை தொடர்பில் எனக்கு அவர் மீது தனிப்பட்ட கோபம் உண்டு.

இருப்பினும் நான் அவரைக் கண்டதில்லை. அவருடன் எனக்கு தொடர்பும் இல்லை.

இலங்கையில் இருந்து தப்பிச் சென்ற ஊடகவியலாளர் மஞ்சுள வெடிவர்தன எனது பாடசாலை நண்பர்.

பிரகீத்தை பிரசல்ஸ் நகரில் வைத்து கண்டதாக மஞ்சுள என்னிடம் தெரிவித்தார்.

எனது பாடசாலை நண்பன் மீது எனக்கு நம்பிக்கை உண்டு. அவர் கூறியது உண்மை என்ற நிலைப்பாட்டிலேயே நான் இன்னமும் இருக்கிறேன்.

பிரகீத் எக்னெலிகொட காணாமல் போனமை தொடர்பில் ராணுவத்தினர் மீது குற்றம் சாட்டப்பட்டதை பொறுத்துக் கொள்ள இயலாத நிலையிலேயே, பிரகீத் வெளிநாட்டில் இருக்கிறார் எனக்கூறப்பட்டதை நான் நாடாமன்றத்தில் கூறவேண்டி ஏற்பட்டது.

பின்னர் ஹோமாகம நீதவான் நீதிமன்றத்திலும் இதனைத் தெரிவித்தேன்.

என்னுடைய தகவல் இதுவாக இருந்தாலும், விசாரணையின் முடிவில் உண்மை தெரியவரும்.

நானும் விமானப் படையில் இருந்திருக்கிறேன். எனது கண்ணில் ஏற்பட்ட ஒரு உபாதை காரணமாகவே நான் அதைவிட்டு வெளியேற நேர்ந்தது.

என்னுடன் இருந்த 04 விமானப் படை வீரர்கள் யுத்தத்தில் உயிரிழந்துள்ளார்கள். அந்த வலி எனக்குள் இன்னும் இருக்கிறது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ராணுவ வீரர்களை காட்டிக் கொடுக்கவோ எவரையும் சர்வதேச நீதிமன்றத்துக்கு கொண்டு செல்லவோ இடம் வழங்கமாட்டார் எனும் உறுதியான கொள்கையில் இருப்பதால் தான் நாம் அவருடன் இருக்கின்றோம்.

நாட்டையும் மக்களையும் பயங்கரவாதிகளிடமிருந்து பாதுகாத்த ராணுவ வீரர்கள் பாதுகாக்கப்பட வேண்டும்.

இந்த அரசாங்கத்தில் அவ்வாறு ராணுவ வீரர்களை பாதுகாக்க தவறுமிடத்து  நான் அரசாங்கத்தை விட்டு வெளியேறத் தயங்க மாட்டேன்” என்றார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்