
தமிழரசுக் கட்சி நாளை தினம் (18) அழைப்பு விடுத்துள்ள ஹர்த்தால் நடவடிக்கை, காலை வேளையில் மட்டுமே நடைபெறும் என, தமிழரசுக் கட்சியின் பதில் செயலாளர் சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன் இன்று (17) அறிவித்துள்ளார்.
முல்லைத்தீவில் இளைஞர் ஒருவரின் மரணத்துக்கு ராணுவத்தினர் காரணமாக இருந்தனர் என குற்றஞ்சாட்டப்பட்டுள்ள நிலையில், அந்த சம்பவத்தைக் கண்டித்தும், அளவுக்கு அதிகமான ராணுவப் பிரசன்னம் மற்றும் ராணுவ அடக்குமுறை என்பவற்றுக்கு எதிர்ப்புத் தெரிவித்தும் நாளை(18) வடக்கு, கிழக்கில் ஹர்த்தாலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
வடக்கு – கிழக்கில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ள ஹர்த்தாலுக்கு, முஸ்லிம் காங்கிரஸ் ஆதரவு வழங்கும் என, அந்தக் கட்சி அறிவித்துள்ளது.
ஆனால், மேற்படி ஹர்த்தால் நடவடிக்கைக்கு ஆதரவளிக்க முடியாது என, யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் தெரிவித்துள்ளது.

தனியொரு அரசியல் கட்சியின் ஹர்த்தால் அழைப்புக்கு பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் ஆதரவு வழங்க முடியாது என, அதன் செயலாளர் தேவதாஸ் அனோஜன் கூறியுள்ளார்.
இந்த நிலையில், தமிழரசுக் கட்சியின் ஹர்த்தாலுக்கு ஆதரவு வழங்கவுள்ளதாக அறிவித்திருக்கும் முஸ்லிம் காங்கிரஸ், ‘வடக்கு – கிழக்கு தமிழர்களின் தாயகம்’ என, இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரா. சாணக்கியன், அண்மையில் தெரிவித்திருந்தமையையும் ஏற்றுக்கொள்கிறதா என, ஐக்கிய சமாதான கூட்டமைப்பின் பொதுச் செயலாளரும் கொழும்பு மாநகர சபை உறுப்பினருமான ஐ.ஏ. கலீலுர் ரஹ்மான் கேள்வியெழுப்பியுள்ளார்.



