தலைப்புச் செய்திகள்

ஆசாத் மௌலானாவை இலங்கைக்கு அழைத்து வர நடவடிக்கை: பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர்

ஏப்ரல் 21 பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பில் சாட்சியம் வழங்கத் தயாராக இருப்பதாகக் கூறப்படும் – தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் முன்னாள் ஊடகச் செயலாளர் ஆசாத் மௌலானாவை, விரைவில் இலங்கைக்கு அழைத்து வரப்படவுள்ளார்.

இதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாக, பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால, ஊடகமொன்றுக்கு வழங்கிய பேட்டியில் தெரிவித்துள்ளார். 

ஆசாத் மௌலானாவின் சாட்சியங்களை உள்ளடக்கிய சனல் 4 தொலைக்காட்சியி நிகழ்ச்சியில், சாட்சியம் வழங்கிய ஏனையவர்களையும் விசாரணைக்காக இலங்கைக்கு அழைப்பது தொடர்பில் அரசாங்கம் நடவடிக்கைகளை முன்னெடுப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

எந்தவொரு குற்றச் செயல்களிலும் எவரேனும் ஒருவர் ஈடுபட்டால், தகுதி தராதரம் பாராது அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்கு அரசாங்கம் உறுதிபூண்டுள்ளதாகவும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.

இதேவேளை ஆசாத் மௌலானாவை விசாரணைகளுக்காக இலங்கைக்கு அழைத்து வரும் விடயத்தை அமைச்சர் பிமல் ரத்நாயக்கவும் உறுதிப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.