தலைப்புச் செய்திகள்

இஸ்ரேலியர்களால் அறுகம்பேக்கு ஆபத்து என்பதில் உண்மையில்லை: பொத்துவில் பிரதேச சபை தவிசாளர் முஷாரப்

இஸ்ரேலியர்களால் அறுகம்பே பிரதேசம் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாக வெளிவரும் செய்திகளில் உண்மைகள் இல்லை என, பொத்துவில் பிரதேச தவிசாளர் எஸ்.எம்.எம். முஷாரப் தெரிவித்துள்ளார்.

நேற்று முன்தினம் (12) பொத்துவில் பிரதேச சபையில் நடந்த ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு பேசும்போது அவர் இதனைக் கூறினார்.

“அறுகம்பே – இஸ்ரேலியர்களின் கூடாரமாக மாறிவிட்டது, இஸ்ரேலியர்களிடம் அறுகம்பே சென்று விட்டது – என வெளிவரும் செய்திகளின் பின்னால் பல சதிகள் உள்ளன” என்றும் அவர் கூறினார்.

அறுகம்பே பிரதேசம் – சுற்றுலாத் தளமாக முன்னேறி விடக் கூடாது எனும் சதி, இந்த செய்தியின் பின்னணியில் இருப்பதாவும் முஷாரப் குறிப்பிட்டார்.

”அறுகம்பேயில் இஸ்ரேலியர்களின் ஆக்கிரமிப்பு நடந்திருப்பதாகவும் – அது இங்குள்ள மக்களுக்கு பாரிய நெருக்கடிகளை உண்டாக்கி இருப்பதாகவும் கூறப்பட்டது. பிகினி எனும் ஆடைக்கு அறுகம்பேயில் தடை ஏற்படுத்தப்பட்டுள்ளது என்கிற செய்தி பரவியது. இஸ்ரேலியர்களின் உயிருக்கு அறுகம்பேயில் ஆபத்து உள்ளது என்கிற பேச்சு எழுந்தது. இதனையடுத்து அறுகம்பே பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு, சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டன. இவற்றின் பின்னால் உள்ளூர் சதிகள் உள்ளன எனும் சந்தேகம் இருக்கிறது” என்றார்.

இதேவேளை, அறுகம்பே பகுதியில் அமைக்கப்பட்டுள்ள இஸ்ரேலியர்களின் சபாத் இல்லம், சட்ட ரீதியான அனுமதி பெறப்படாமல் நிர்மாணிக்கப்பட்டிருக்குமாயின், அதனை அகற்றுவதற்கு – பொத்துவில் பிரதேச சபையில் ஏகமனதான தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

பொத்துவில் பிரதேச சபையின் அதிகாரத்துக்கு உட்பட்ட பகுதியில் அறுகம்பே அமைந்துள்ளது.

இதையும் காணுங்கள்