தலைப்புச் செய்திகள்

மாணவர்களிடையே அதிகரிக்கும் உளநல பாதிப்பு: 22.4 வீதமானோர் தனிமையை உணர்கின்றனர்; 7.5 வீதமானோக்கு நண்பர்கள் இல்லை

பாடசாலை மாணவர்கள் – பல்வேறு சமூக காரணிகளால் தற்போது சில வகையான உளவியல் துயரங்களை அனுபவித்து வருவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

கடந்த ஆண்டு நடத்தப்பட்ட ஒரு கணக்கெடுப்பின் மூலம் இது தெரியவந்ததாக, மனநல பணிப்பகத்தின் பதில் பணிப்பாளர் டொக்டர் லக்மினி மகோதரத்ன இந்த விடயத்தைக் கூறினார்.

“2024 ஆம் ஆண்டில், இலங்கையில் பாடசாலை சுகாதார கணக்கெடுப்பு ஒன்று நடத்தப்பட்டது. அதில் மாணவர்களின் தரவுகளை நாங்கள் ஆராய்ந்தபோது, 22.4% மாணவர்கள் தனிமையாக உணர்ந்ததைக் கண்டறிந்தோம்.

03 முதல் 17 வயதுடைய மாணவர்களில், 11.9% பேர் உணர்ச்சி துயரம் காரணமாக தூங்குவதில் சிரமப்படுவதாகக் கூறினர்.

சுமார் 18% பேர் மனச்சோர்வின் அறிகுறிகளைக் காட்டினர். சுமார் 7.5% பேருக்கு நெருங்கிய நண்பர்கள் இல்லை. மேலும் 25% மாணவர்கள் தங்கள் உள் பிரச்சினைகளைப் பற்றி பேச யாரும் இல்லை என்று கூறினர்.

அதாவது 75% மாணவர்களுக்கு நெருங்கிய நம்பிக்கைக்குரியவர் இல்லை. இது நம்மை யோசிக்க வைக்கிறது. இது உண்மையில் இலங்கையில் நடக்குமா? நம் மாணவர்கள் மிகுந்த அழுத்தத்தில் இருப்பதாகத் தெரிகிறது.

பெரியவர்களும் இதேபோன்ற மன அழுத்தத்தை அனுபவிக்கலாம். பல்வேறு சமூக காரணிகள் மற்றும் பதட்டங்கள் இதற்கு காரணமாக அமையக் கூடும்”என்று, அவர் சுகாதார மேம்பாட்டு பணியகம் – ஏற்பாடு செய்த ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு தெரிவித்தார்.

மேலும், குறித்த ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றிய தேசிய மனநல நிறுவனத்தின் மனநல வைத்தியர் டொக்டர் சஜீவ அமரசிங்க; இலங்கையில் தற்போது சராசரியாக தினமும் எட்டு தற்கொலைகள் நிகழ்கின்றன என்றார்.

“1996 ஆம் ஆண்டில், தற்கொலை விகிதத்தில் இலங்கை உலகில் இரண்டாவது இடத்தில் இருந்தது – 100,000 பேருக்கு 47 பேர் தற்கொலை செய்தனர். அதன் பின்னர், ஜனாதிபதி ஆணைக்குழுவுடன் இணைந்து எடுக்கப்பட்ட முடிவுகளால், இந்த விகிதம் கணிசமாகக் குறைந்துள்ளது.

இப்போது அது 100,000 க்கு 15 ஆக உள்ளது. ஆண்டுதோறும் சுமார் 3,500 தற்கொலைகள் நடக்கின்றன. கடந்த இரண்டு முதல் மூன்று ஆண்டுகளில், எண்ணிக்கை மேலும் அதிகரிக்கவில்லை. சராசரியாக, தினமும் எட்டு தற்கொலைகள் நிகழ்கின்றன. மிகவும் விளம்பரப்படுத்தப்பட்ட சம்பவங்கள் மட்டுமே ஊடகங்களை அடைகின்றன. இன்னும் பல அறிக்கையிடப்படாமல் போகின்றன.

ஒட்டுமொத்த தற்கொலை விகிதம் பெருமளவில் மாறவில்லை என்றாலும், சமீபத்திய தற்கொலைகள் உணர்ச்சிவசப்பட்டு வருகின்றன. இருப்பினும், ஊடகங்கள் கடந்த காலத்தில் செய்தது போல் இதுபோன்ற சம்பவங்களை இப்போது அடிக்கடி வெளியிடுவதில்லை. ஈது ஒரு பெரிய முன்னேற்றமாகும்” என்றும் அவர் தெரிவித்தார்.