தலைப்புச் செய்திகள்

மாதாந்தம் லஞ்சம் கேட்டுப் பெற்ற பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி கைது

மாதாந்தம் லஞ்சம் கோரிய ஒக்கம்பிட்டி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி, ஒரு தொகைப் பணத்தை பெற்றுக் கொண்ட போது கைது செய்யப்பட்டார்.

லஞ்சம், ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவினர் – இவரைக் கைது செய்தனர்.

மாளிகாவில – மொனராகலை வீதி, வீரகஸ் சந்திக்கு அருகில் நேற்று (29) மாலை 5.00 மணியளவில் அவர் கைது செய்யப்பட்டார்.

மணல் அகழ்வு நடவடிக்கை தொடர்பாக குறித்த பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி லஞ்சம் கேட்டதாகக் கூறி, ஒக்கம்பிட்டியில் உள்ள காமினியபுர பகுதியைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் அளித்த புகாரைத் தொடர்ந்து இந்த கைது நடந்தது.

பொலிஸாரின் தலையீடு இன்றி, ட்ராக்டர் மூலம் மணல் கொண்டு செல்ல அனுமதிப்பதற்கு குறித்த பொறுப்பதிகாரி மாதந்தோறும் 50,000 ரூபாய் லஞ்சம் கோரியிருந்தார்.

இந்த நிலையில், அவர் கட்டும் புதிய வீட்டின் வேலைக்கு மூன்று கியூப் மணல் – அல்லது 45,000 ரூபாய் பணம் கோரியதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. பின்னர் 40,000 ரூபாயாக அந்தத் தொகையை குறைத்ததாக குறைத்ததாகக் கூறப்படுகிறது.

இதனையடுத்து குறித்த பணத்தொகை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி பெற்றுக் கொண்ட போது, அவர் கைதானார்.