தலைப்புச் செய்திகள்

வீடுகள் எரிந்த அமைச்சர்கள், எம்.பிகளுக்கு வழங்கப்பட்ட இழப்பீட்டு தொகையை மீளப்பெற உத்தரவிடக் கோரி மனுத் தாக்கல்

முன்னாள் அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் வீடுகள் மற்றும் சொத்துக்களுக்கு, போராட்டக்காரர்களால் தீ வைக்கப்பட்ட பின்னர், அவர்களுக்கு அரசு வழங்கிய இழப்பீட்டுத் தொகையை மீளப்பெறுவதற்கு உத்தரவிடக் கோரி தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமைகள் மனுவை, நொவம்பர் 13ஆம் திகதியன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்வதற்கு உச்ச நீதிமன்றம் இன்று (17) தீர்மானித்தது.

2022ஆம் ஆண்டு மே மாதம் 09ஆம் திகதியன்று – காலி முகத்திடலில் ‘கோட்டா கோ ஹோம்’ போராட்ட தளத்தின் மீது நடத்தப்பட் தாக்குதலைத் தொடர்ந்து, நாடு முழுவதும் பரவிய வன்முறை சம்பவங்களின் காரணமாக, அன்றை அரசாங்கத்தைச் சேர்த நாடாளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்களின் வீடுகளுக்கு தீ வைக்கப்பட்டது.

சமூக ஆர்வலர் சட்டத்தரணி கலாநிதி ரவீந்திரநாத் தாபரே இந்த அடிப்படை உரிமைகள் மனுவை தாக்கல் செய்தார்.

நீதியரசர்கள் மஹிந்த சமயவர்தன மற்றும் சோபித ராஜகருணா ஆகியோர் அடங்கிய உச்ச நீதிமன்ற அமர்வு முன் இந்த மனு எடுத்துக்கொள்ளப்பட்டது.

முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் கோத்தபய ராஜபக்ஷ, பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன, பாதுகாப்புப் பணியாளர்களின் முன்னாள் தலைமைத் தளபதி சவேந்திர சில்வா, முன்னாள் பொலிஸ் மா அதிபர் சந்தன விக்ரமரத்ன, முன்னாள் பொதுப் பாதுகாப்பு அமைச்சர்கள் டிரான் அலஸ் மற்றும் பிரசன்ன ரணதுங்க, பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய, தற்போதைய பொதுப் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால, சட்டமா அதிபர் உள்ளிட்ட 15 பேர் இந்த மனுவில் பிரதிவாதிகளாகக் குறிப்பிடப்பட்டுள்ளனர்.

மே 9, 2022 அன்று போராட்டக் களத்தில் நடந்த தாக்குதலைத் தொடர்ந்து, நாடு முழுவதும் வன்முறை சம்பவங்கள் வெடித்ததாகவும், இதன் விளைவாக வீடுகள் மற்றும் சொத்துக்கள் அழிக்கப்பட்டதாகவும் மனுதாரர் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த பெப்ரவரி 05ஆம் திகதி நாடாளுமன்றத்தில் அமைச்சர் டொக்டர் நலிந்த ஜயதிஸ்ஸ வெளியிட்ட தகவலின் படி, முன்னாள் அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் உட்பட 43 நபர்களுக்கு சொத்து சேதத்திற்காக முந்தைய அரசாங்கம் 1.22 பில்லியன் ரூபாய் இழப்பீடு வழங்கியதாகவும் மனுதாரர் தெரிவித்துள்ளார்.

இது பொது நிதியை முற்றிலுமாக தவறாகப் பயன்படுத்தியதாக மனுதாரர் குற்றம் சாட்டுகிறார். இயற்கை பேரிடர் ஏற்பட்டாலும் கூட, சொத்து சேதத்திற்கு ஒரு நபருக்கு அதிகபட்ச இழப்பீடு 2.5 மில்லியன் ரூபாய் மட்டுமே வழங்கப்படும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த கொடுப்பனவுகள் முறையான சட்ட கட்டமைப்புக்கு வெளியே செய்யப்பட்டதாக குறிப்பிட்டுள்ள மனுதாரர், இதனால் தனது அடிப்படை மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக அறிவிக்குமாறு உச்ச நீதிமன்றத்தை கோரியுள்ளார்.

அதன்படி, செலுத்தப்பட்ட இழப்பீட்டு நிதியை மீட்டெடுக்கவும், அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்குச் சொந்தமான சேதமடைந்த சொத்துக்களை முறையாக மதிப்பிடவும், நிறுவப்பட்ட சட்ட நடைமுறைகளுக்கு ஏற்ப சட்டப்பூர்வமாக பணம் செலுத்தவும் மனுதாரர் நீதிமன்ற உத்தரவை கோரியுள்ளார்.