தலைப்புச் செய்திகள்

தெ.கி. பல்கலைக்கழகத்தில் விடைத்தாளைத் தொலைத்த விரிவுரையாளர்; மாணவனுக்கு பட்டம் இல்லை: பொறுப்புக் கூற வேண்டியவரை காப்பாற்ற முயற்சிக்கிக்கிறாரா உபபேந்தர்?

– யூ.எல். மப்றூக் –

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் இஸ்லாமிய மற்றும் அரபு மொழி பீட மாணவர் ஒருவரின் இறுதியாண்டுப் பரீட்சைக்குரிய விடைத்தாள் ஒன்று காணாமல் போனமையினால், குறித்த மாணவருக்கு – இறுதியாக நடந்த பட்டமளிப்பு விழாவில், அவருக்கான பட்டம் வழங்கப்படாமல் அநீதியிழைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதேவேளை, குறித்த விடைத்தாள் காணாமல் போனமைக்கு முழுப்பொறுப்புடைய விரிவுரையாளர் கலாநிதி எம்.ஐ.எம். ஜசீல் என்பவருக்கு எதிராக, உரிய நடவடிக்கைகள் எதனையும் எடுக்காமல், அவரைக் காப்பாற்றும் நடவடிக்கையில் பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் பேராசிரியர் எஸ்.எம். ஜுனைதீன் ஈடுபட்டு வருவதாகவும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் இஸ்லாமிய மற்றும் அரபு மொழி பீடத்தின் 2018/2019 வருடத்துக்குரிய மாணவர் அஸ்மி சாலிஹ் (பதிவு எண்: SEU/IS/18/IC/144) என்பவர், தனது இறுதியாண்டுப் பரீட்சைக்காக, ‘இஸ்லாமியக் கண்ணோட்டத்தில் முகாமை மற்றும் தலைமைத்துவம்’ எனும் பாடத்துக்கான பரீட்சைக்கு 26.09.2023 அன்று தோற்றியிருந்தார்.

குறித்த பரீட்சையின் முதல் தேர்வாளராக (1st Examiner) விரிவுரையாளர் எம்.ஐ.எம். ஜசீல் கடமையாற்றினார். இவர்தான் குறித்த பாடத்தை கற்பித்து, வினாத்தாளை தாயாரித்து, அதற்கான விடைத்தாள்களையும் திருத்தினார்.

இந்தப் பின்னணியில், குறித்த மாணவர் பரீட்சைக்குத் தோற்றி 11 மாதங்களுக்குப் பிறகு அதாவது, 21.08.2024 அன்று, இறுதி முடிவுகள் வெளியிடப்பட்டன. ஆனாலும், மாணவர் அஸ்மி எழுதிய ‘இஸ்லாமியக் கண்ணோட்டத்தில் முகாமை மற்றும் தலைமைத்துவம்’ எனும் பாடத்துக்கான முடிவு அவருக்குக் கிடைக்கவில்லை.

இதன் பின்னர் 03 மே 2025 அன்று தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் பட்டமளிப்பு விழா நடைபெற்றது. அதில் மாணவர் அஸ்மியின் 2018/2019 தொகுதி மாணவர்களுக்கு பட்டம் வழங்கப்பட்ட போதும், அஸ்மிக்கு பட்டம் வழங்கப்படாமல் அநீதியிழைக்கப்பட்டது.

அஸ்மி சாலிஹ் தோற்றிய மேற் குறிப்பிட்ட பாடத்துக்கான பரீட்சை விடைத்தாள்கள் அனைத்தும் சரிபார்க்கப்பட்டு, எண்ணப்பட்டு, பொதி செய்யப்பட்ட போதும், மாணவர் அஸ்மியுடைய விடைத்தாள் காணாமல் போயுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

மேற்படி பரீட்சை 26.09.2023 அன்று நடைபெற்றது. விடைத்தாள்களைத் திருத்துவதற்காக, விடைத்தாள்களைக் கொண்ட பொதியை – விரிவுரையாளர் கலாநிதி எம்.ஐ.எம். ஜசீல் 13.10.2023 அன்று பெற்றுக் கொண்டார். பின்னர், திருத்தப்பட்ட விடைத்தாள்களைக் கொண்ட பொதியை 07.03.2024 அன்று விரிவுரையாளர் ஜசீல் திரும்பக் கையளித்தார்.

அதாவது, மேற்குறிப்பிட்ட விடைத்தாள்களைத் திருத்துவதற்கு விரிவுரையாளர் ஜசீல் சுமார் 05 மாதங்களை எடுத்துக் கொண்டார். ஆயினும், ஒரு பரீட்சை நடந்து மூன்று மாதங்களில் அந்தப் பரீட்சைக்கான விடைத்தாள்கள் திருத்தப்பட்டுக் கையளிக்கப்பட வேண்டுமென பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு சுற்றுநிரூபம் (Circular) கூறுகிறது.

இதன்படி, விரிவுரையாளர் ஜசீலிடம் மேற்படி விடைத்தாள்கள் இருந்த காலப்பகுதியிலேயே – மாணவர் அஸ்மியின் விடைத்தாள் காணாமல் போயுள்ளமை உறுதியாகிறது.

குறித்த பரீட்சைக்குப் பின்னர் அனைத்து விடைத்தாள்களும் எண்ணப்பட்டு சரியாக சீல் வைக்கப்பட்டன என்பதை பரீட்சை மேற்பார்வையாளர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர். இந்தநிலையில், மாணவர் அஸ்மியினுடைய விடைத்தாள் தொலைந்து போனதா, அழிக்கப்பட்டதா அல்லது அகற்றப்பட்டதா என்ற வலுவான சந்தேகங்கள் உள்ளன எனவும் கூறப்படுகிறது.

கொழும்பு பல்கலைக்கழகத்தில் நடந்த இதேபோன்ற ஒரு சம்பவத்தில், அந்த சம்பவத்துக்குப் பொறுப்பாக இருந்த சிங்களத் துறையைச் சேர்ந்த சிரேஷ்ட விரிவுரையாளர் சரத் விஜேசூரிய, உடனடியாக இடைநீக்கம் செய்யப்பட்டு, ஒழுக்காற்று விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு, பின்னர் தண்டிக்கப்பட்டார் என – தகவல்கள் உள்ளன.

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் உபவேந்தராக கடந்த மே மாதம் 26ஆம் திகதி பேராசிரியர் எஸ்.எம். ஜுனைதீன் நியமிக்கப்பட்டார். அதற்கு முன்னர் பதில் உபவேந்தராகக் கடமையாற்றிய யூ.எல். மஜீத், மேற்படி மாணவர் அஸ்மியின் பரீட்சை விடைத்தாள் காணாமல் போன விடயத்தை – பல்கலைக்கழக பேரவைக்கு (University Council) கொண்டு சென்று, அங்கு அது குறித்து விவாதிப்பதற்குத் தீர்மானித்து, அதனை எழுத்து மூலம் குறிப்பிட்டுமிருந்தார்.

ஆயினும், பேராசிரியர் ஜுனைதீன் உபவேந்தராகப் பதவியேற்ற பின்னர், குறித்த விடைத்தாள் காணாமல் போன விவகாரத்தை, பல்கலைக்கழக பேரவைக்கு (University Council) கொண்டு செல்வதைத் தவிர்த்து, பல்கலைக்கழக மூதவைக்கு (University Senate) எடுத்துச் சென்றுள்ளார். இவ்வாறு செயற்பட்டமையின் மூலம், விரிவுரையாளர் ஜசீலுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கையொன்று மேற்கொள்ளப்படாமல் உபவேந்தர் காப்பாற்றியுள்ளார் என கூறப்படுகிறது.

இந்த நிலையில், பாதிக்கப்பட்ட மாணவர் அஸ்மி சாலிஹ் என்பவருக்கு இவ்விடயத்தில் நிவாரணமொன்றை பெற்றுக் கொடுத்து, அவருக்கான பட்டத்தை வழங்குவதற்கு, கடந்த மூதவை (University Senate) கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக, பல்கலைக்கழகத்தின் பதிவாளர் எம்.ஐ. நவ்பர் ‘புதிது’ செய்தித்தளத்துக்கு கூறினார்.

எது எவ்வாறாயினும், இந்த விடயத்தில் குறித்த மாணவனின் பரீட்சை விடைத்தாள் தொலைந்து போனமைக்கு பொறுப்புக் கூற வேண்டிய விரிவுரையாளர் ஜசீலுக்கு எதிராக, ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என பரவலாக வலியுறுத்தப்படுகிறது.

தொடர்பான செய்தி: தென்கிழக்கு பல்கலைக்கழகத்திலிருந்து பொறியியல் பீட முதலாமாண்டு மாணவர்களை வெளியேறுமாறு உத்தரவு