தலைப்புச் செய்திகள்

ஒன்பது மாதங்கள் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள சுஹைல்; எந்தக் குற்றமும் செய்யவில்லை என, நீதிமன்றில் பொலிஸார் தெரிவிப்பு

பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் – கிட்டத்தட்ட ஒன்பது மாதங்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ள முகமது ரிஃபாய் முகமது சுஹைல் எனும் 21 வயது இளைஞர், எந்தக் குற்றமும் செய்யவில்லை என்று தெஹிவளை பொலிஸார் இன்று புதன்கிழமை (9) கல்கிஸ்ஸை நீதவான் நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.

இதேவேளை, குறித்த இளைஞருக்கு பிணை வழங்குவதில் பொலிஸாருக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை என்றும், விசாரணையின் போது சுஹைலுக்கு எதிராக எந்த ஆதாரமும் கிடைக்கவில்லை என்றும் தெஹிவளை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஒப்புக்கொண்டார் என, சமூக நீதி சட்டத்தரணிகள் கூட்டமைப்பின் சட்டத்தரணிகள் தெரிவித்துள்ளனர்.

மாவனல்லையைச் சேர்ந்த விமான போக்குவரத்துத் துறையில் கற்கும் சுஹைல், முதன்முதலில் 2024 ஒக்டோபர் மாதம் – தெஹிவளையில் உள்ள இஸ்ரேலிய தூதரக வளாகத்திற்கு அருகில் கைது செய்யப்பட்டார்.

ஆரம்பத்தில் தேசிய அடையாள அட்டையை எடுத்துச் செல்லவில்லை என்பதற்காக அவர் தடுத்து வைக்கப்பட்டிருந்தாலும், அதை சமர்ப்பித்த பின்னர், அவரை நீதிமன்றம் விடுவித்தது.

ஆயினும் இஸ்ரேலிய கொடியை மிதிக்கும் ‘இன்ஸ்டாகிராம்’ பதிவின் அடிப்படையில் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ், சிறிது நேரத்திலேயே அவர் மீண்டும் கைது செய்யப்பட்டார்.

இந்தப் பின்னணயில், இன்றைய விசாரணையின் போது, ​​எந்தக் குற்றமும் நடக்கவில்லை என்றால், சுஹைல் ஏன் இவ்வளவு காலம் தடுத்து வைக்கப்பட்டார் என்று பொலிஸாரிடம் நீதவான் கேள்வி எழுப்பியதாக கூறப்படுகிறது.

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள ஒருவருக்கு பிணை வழங்க, நீதிமன்றத்திற்கு அதிகாரம் இல்லை என்று கூறிய நீதவான், முன்னதாகவே சட்டமா அதிபரை இது குறித்து கலந்தாலோசிக்காமைக்காக, பொலிஸாரை விமர்சித்தார்.

இதற்குப் பதிலளித்த பொலிஸார், மே 27ஆம் திகதியன்று சட்டமா அதிபர் திணைக்களத்துக்கு ஒரு சட்ட அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டதாகவும், ஆனால் அதற்கான அறிவுறுத்தல்கள் இன்னும் நிலுவையில் இருப்பதாகவும் நீதிமன்றில் தெரிவித்தனர்.

இதனையடுத்து இம்மாதம் 15ஆம் திகதி சட்ட மா அதிபரின் ஆலோசனையுடன் மீண்டும் நீதிமன்றத்திற்கு வருமாறு பொலிஸாருககு நீதிபதி உத்தரவிட்டார்.

இன்றைய தினம் வீடியோ மூலம் நீதிமன்றில் ஆஜரான சுஹைல், அடுத்த விசாரணையில் திறந்த நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதேவேளை, சுஹைல் எனும் இந்த இளைஞருக்கு ஏற்பட்டுள்ள இந்த நிலை தொடர்பில், ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான், தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திர குமார் பொன்னம்பலம் ஆகியோர், இன்றைய தினம் நாடாளுமன்றல் பேசினர்.