
விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ள நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் டொக்டர் மகேஷி விஜேரத்னவின் மகள், லஞ்சம் மற்றும் ஊழல் தடுப்பு ஆணைக்குழு அதிகாரிகளை அச்சுறுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார்.
டொக்டர் மகேஷியின் 21 வயது மகள், லஞ்சம் மற்றும் ஊழல் தடுப்பு ஆணைக்குழுவின் அதிகாரிகளுக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளார்.
இதன் கீழ், இன்று (07) டொக்டர் மகேஷியின் மகளை லஞ்சம் மற்றும் ஊழல் தடுப்பு ஆணைக்குழு அதிகாரிகள் கைது செய்தனர்.
டொக்டர் மகேஷி விஜேரத்ன, தான் இணைந்த தனியார் நிறுவனம் மூலம் 50,000 ரூபாய் மதிப்புள்ள மருத்துவ உபகரணங்களை, நோயாளிகளுக்கு 175,000 ரூபாய்க்கு விற்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட பின்னர் தற்போது விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
டொக்டர் மகேஷியின் இந்த மோசடி காரணமாக, நோயாளிகளுக்கு 300 மில்லியன்ரூபாய்க்கும் அதிகமான இழப்பு ஏற்பட்டதாகக் குற்றம் சாட்டிய லஞ்சம் மற்றும் ஊழல் தடுப்பு ஆணைக்குழு; டொக்டர் மகுஷி – உத்தியோகபூர்வ வைத்திய நடைமுறைகள் மூலம், அறுவை சிகிச்சை பொருட்களை வாங்காமல் பொது சேவை கொள்முதல் விதிகளை மீறினார் எனவும் குற்றஞ்சாட்டியுள்ளது.
மேலும், பல நாட்களாக மூளைச்சாவு அடைந்ததாக அறிவிக்கப்பட்ட நோயாளிகளுக்கு, டொக்டர் மகேஷி விஜேரத்ன அறுவை சிகிச்சை செய்திருப்பதும் சமீபத்தில் அம்பலமாகியது.
இதேவேளை, வைத்திய மோசடிக்கு உதவிய அவருடன் தொடர்புடைய இரண்டு நபர்களும் தற்போது விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.



