தலைப்புச் செய்திகள்

அதானி நிறுவனத்துக்கு இலங்கை அரசாங்கம் பணம் செலுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதாக தகவல்

இலங்கையில் அதானி நிறுவனத்தின் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டம் கைவிடப்பட்டுள்ள நிலையில், தற்போது அந்த நிறுவனம் ஆரம்பத்தில் செலவிட்ட சில மில்லியன் அமெரிக்க டொலர்களை, திருப்பிச் செலுத்த வேண்டிய கட்டாயத்தில் அரசாங்கம் உள்ளது என்று ‘டெய்லி மிரர்’ செய்தி வெளியிட்டுள்ளது.

இந்தியாவின் அதானி கிரீன் எனர்ஜி நிறுவனம், இரண்டு முன்மொழியப்பட்ட காற்றாலை மின் திட்டங்களிலிருந்து விலகுவதாக – இலங்கை அரசாங்கத்துக்கு முன்னர் அறிவித்திருந்தது.

உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தின் விலையைக் குறைக்க தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் முயன்றதை அடுத்து, அதானி நிறுவனம் அந்த முடிவை எடுத்தது. அதானியுடன் இந்தத் திட்டத்தை மேற்கொண்ட கடந்த அரசாங்கம் ஒப்புக் கொள்ளப்பட்ட செலவை, தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் ஏற்கவில்லை. வடக்கு மாகாணத்தில் மன்னார் மற்றும் பூநகரி ஆகிய பிரதேசங்களில் 442 மில்லியன் டொலர்களை முதலீடு செய்து, காற்றாலை மின் நிலையத் திட்டத்தை அதானி நிறுவன் அமைக்கவிருந்தது.

இந்தத் திட்டம் 2025 ஆம் ஆண்டுக்குள் தேசிய மின்கட்டமைப்பில் குறைந்தது 350 மெகாவோட் மின்சாரத்தை சேர்க்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

இலங்கையில் நிலைபெறுதகு வலு அதிகாரசபையுடன் (SEA) இணைந்து ஆராய்ச்சி மற்றும் விசாரணைகளுக்காக ஆரம்பத்தில் செய்த செலவுகளை திருப்பிச் செலுத்துமாறு கேட்டு, இந்த ஆண்டு மே மாதம் அரசாங்க அதிகாரிகளுக்கு ஒரு கடிதத்தை அதானி நிறுவனம் அனுப்பியது.

இருப்பினும், நிலைபெறுதகு வலு அதிகாரசபைக்குச் செலுத்தப்பட்ட 03 மில்லியன் அமெரிக்க டொலர்கள் உட்பட அனைத்து செலவுகளையும் உள்ளடக்கிய மதிப்பீடு செய்யப்பட வேண்டிய சரியான தொகையை நிறுவனம் இன்னும் குறிப்பிடவில்லை.

இது இவ்வாறிருக்க, மின் மற்றும் எரிசக்தி அமைச்சு, குறிப்பிட்ட செலவை இன்னும் திருப்பிச் செலுத்துவது குறித்து எந்த முடிவையும் எடுக்கவில்லை. தற்போதைய நிலை குறித்து கேட்டபோது, ​​இது தொடர்பாக சட்ட ஆலோசனை பெறப்படும் என்று ஒரு உயர் அதிகாரி கூறினார்.

“ஏதேனும் பணம் செலுத்தப்பட்டால், அது அமைச்சரவை ஒப்புதல் மூலம் மட்டுமே அது நிறைவேற்றப்படும்” எனவும் அவர் தெரிவித்தார் என்று டெய்லி மிரர் தெரிவித்துள்ளது.