
பொத்துவில் பிரதேச சபையை – முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.எம். முஷாரப் தலைமையிலான அன்னாசியை சின்னமாகக் கொண்ட சுயேட்சைக் குழு முஸ்லிம் காங்கிரஸின் உதவியுடன் கைப்பற்றியுள்ளது.
பொத்துவில் பிரதேச சபையின் தவிசாளர் மற்றும் பிரதித் தவிசாளர் ஆகியோரைத் தெரிவு செய்யும் கூட்டம் – கிழக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் ஏ.எல்.எம். அஸ்மி தலைமையில் இன்று (27) பொத்துவில் பிரதேச சபை மண்டபத்தில் நடைபெற்றது.
தவிசாளரைத் தெரிவு செய்வதற்கான வாக்கெடுப்பின் போது, அன்னாசியை சின்னமாகக் கொண்ட சுயேட்சைக் குழுவின் தலைவர் முஷாரப், போட்டியின்றித் தெரிவானார்.
உப தவிசாளர் பதவிக்காக ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸைச் சேர்ந்த ஏ. மாபிர் மற்றும் தமிழ் தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்த டீ. சுபோகரன் ஆகியோர் முன்மொழியப்பட்டனர்.
இதில் சுபோகரன் 03 வாக்குகளையும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர் மாபிர் ஆதரவாக 13 வாக்குகளைப் பெற்றனர்.
பொத்துவில் பிரதேச சபையின் தவிசாளராகத் தெரிவுசெய்யப்பட்டுள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் முஷாரப், நேற்று முன்தினம் முஸ்லிம் காங்கிரஸில் இணைந்து கொண்டார்.
இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினரும் கட்சியின் பிரதித் தேசிய அமைப்பாளருமான எம்.எஸ்.உதுமாலெப்பை, பொத்துவில் அமைப்பாளரும் முன்னாள் தவிசாளருமான எம்.எஸ்.வாசித், கட்சியின் மாவட்ட செயற்குழு செயலாளர் ஏ.சி.சமால்தீன், கட்சியின் முக்கியஸ்தர்கள் உட்பட உள்ளூராட்சி திணைக்கள அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.



