
ஈரான் மீது தீவிர தாக்குதல்களை நடத்துமாறு இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் – இஸ்ரேலிய ராணுவத்திற்கு உத்தரவிட்டுள்ளார்.
“ஈரானின் போர் நிறுத்தத்தை மீறியுள்ளதாகவும் அதற்கு எதிராக, தெஹ்ரானின் மையப்பகுதியில் உள்ள அரச இலக்குகள் மீது கடுமையான தாக்குதல்கள் மூலம் பதிலளிக்க வேண்டும்” என்று அவர் கூறியுள்ளார்.
இஸ்ரேலிய ராணுவம் இப்போது தங்குமிடங்களிலிருந்து வெளியேறுவது பாதுகாப்பானது என்று கூறிய சிறிது நேரத்திலேயே இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இதேவேளை, ஈரானுடன் போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டதாக அரசாங்கம் முன்னதாக அறிவித்த போதிலும், ‘ஆபத்து தொடர்கிறது’ என்று இஸ்ரேல் ராணுவம் எச்சரித்துள்ளது.
“யுத்த நிறுத்த ஒப்பந்தத்தை மீறும் எந்தவொரு நபருக்கும் – சக்திவாய்ந்த பதிலடி கொடுப்பதற்காக உயர் மட்ட விழிப்புணர்வையும் தயார்நிலையையும் பராமரிக்க அனைத்து ராணுவத்தினருக்கும் தலைமைத் தளபதி அறிவுறுத்தியுள்ளார்” என்று இஸ்ரேலிய ராணுவ செய்தித் தொடர்பாளர் பிரிகேடியர் ஜெனரல் எஃபி டெஃப்ரின் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, இஸ்ரேல் மீது ஈரான் இரண்டு பலிஸ்டிக் ஏவுகணைகளை ஏவியதாகவும், இரண்டும் இடைமறிக்கப்பட்டதாகவும் டைம்ஸ் ஒஃப் இஸ்ரேல் தெரிவித்துள்ளது.
இது இவ்வாறிருக்க, போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்ட பிறகு – இஸ்ரேல் மீது ஏவுகணைகளை ஏவியதாக இஸ்ரேலிய கூறுவதை ஈரான் நிராகரித்துள்ளது.



