தலைப்புச் செய்திகள்

பலாங்கொட பிரதேச சபையின் தேசிய மக்கள் சக்தி தவிசாளர் ராஜிநாமாவை அடுத்து, புதியவர் நியமனம்

பலாங்கொட பிரதேச சபை தவிசாளர் பதவியில் இருந்து – தேசிய மக்கள் சக்தி சார்பாக தெரிவு செய்யப்பட்ட ரஞ்சித் உதய குமார ராஜினாமா செய்துள்ளார்.

இதனையடுத்து, பலாங்கொட பிரதேச சபையின் புதிய தவிசாளராக கம எதிகே ஆரியதாச நியமிக்கப்பட்டுள்ளார்.

2017 ஆம் ஆண்டு 16 ஆம் இலக்க உள்ளூர் அதிகார சபை தேர்தல்கள் (திருத்தம்) சட்டத்தின் மூலம் திருத்தப்பட்ட உள்ளூர் அதிகார சபை தேர்தல்கள் கட்டளைச் சட்டத்தின் (அத்தியாயம் 262) பிரிவு 66B(2) இன் படி இந்த நியமனம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பலாங்கொட பிரதேச சபையின் தேர்தல் அதிகாரி சுரங்க அம்பகஹதென்ன நேற்று (ஜூன் 19) விசேட வர்த்தமானி அறிவிப்பின் மூலம் தொடர்புடைய அறிவிப்பை வெளியிட்டார்.

கட்டளைச் சட்டத்தின் விதிகளுக்கு இணங்க, முன்னாள் தவிசாளர் சார்பான அரசியல் கட்சியான – தேசிய மக்கள் சக்தியின் செயலாளருக்கு, தவிசாளர் வெற்றிடத்தை நிரப்ப அதே கட்சியிலிருந்து ஒரு உறுப்பினரை பரிந்துரைக்குமாறு அறிவுறுத்தப்பட்டது.

இதற்கிணங்க, கம எதிகே ஆரியதாசவை தேசிய மக்கள் சக்தி பரிந்துரைத்ததை அடுத்து, அவரது நியமனம் தேர்தல் அதிகாரியால் முறையாக உறுதிப்படுத்தப்பட்டது.