தலைப்புச் செய்திகள்

ஜனாதிபதியின் மன்னிப்பு பட்டியலில் பெயர் இல்லாத சிறைக் கைதி விடுவிக்கப்பட்டமை தொடர்பில், ஜனாதிபதி செயலகம் அறிக்கை

அனுராதபுரம் சிறையில் தண்டனை அனுபவித்து வந்த டப்ளியூ.எச். அதுல திலகரத்ன என்ற நபர், 2025 வெசாக் பண்டிகையின் போது வழங்கப்பட்ட ஜனாதிபதி மன்னிப்பின் கீழ் விடுவிக்கப்பட்டதாகவும், இந்த சம்பவம் தொடர்பாக கடுமையான முறைகேடு நடந்திருக்கலாம் என்றும் செய்திகள் வெளியாகியுள்ள நிலையில், அதனைக் கவனத்தில் கொண்டுள்ளதாக, ஜனாதிபதி செயலகம் விடுத்துள்ள அறிக்கையொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசியலமைப்பின் பிரிவு 34 (1) இன் படி, தண்டனை பெற்ற கைதிகளுக்கு மன்னிப்பு வழங்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு உள்ளது. இந்த அரசியலமைப்பு ஏற்பாட்டின் கீழ், தகுதியான கைதிகளின் பெயர்கள் – சிறை அதிகாரிகளால் தேர்ந்தெடுக்கப்பட்டு, நீதி அமைச்சுக்கு சமர்ப்பிக்கப்படும். பின்னர் அமைச்சின் மதிப்பாய்வுக்குப் பிறகு, இறுதிப் பட்டியல் ஜனாதிபதியின் ஒப்புதலுக்காக ஜனாதிபதி செயலகத்திற்கு அனுப்பப்படும்.

இருப்பினும், மேற்கூறிய சம்பவம் தொடர்பாக, சிறைச்சாலை ஆணையாளர் நாயகம் ஜனாதிபதி செயலகத்திற்கு சமர்ப்பித்த மன்னிப்புக்கு பரிந்துரைக்கப்பட்ட 388 கைதிகளின் உத்தியோகபூர்வ பட்டியலில், அனுராதபுரம் சிறைச்சாலையில் தண்டனை பெற்றுவந்த சம்பந்தப்பட்ட நபரின் பெயர் இல்லை.

அதன்படி, இந்த நபர் மன்னிப்பு பெற ஜனாதிபதியால் அங்கீகரிக்கப்பட்டவர்களில் இல்லை.

இதற்கு பதிலளிக்கும் விதமாக, ஜனாதிபதி செயலகம் நேற்று (06) குற்றப் புலனாய்வுத் திணைக்களத்துக்கு (சி.ஐ.டி) “ஜனாதிபதி மன்னிப்பு இல்லாமல் ஒரு கைதியை விடுவித்தல்” என்ற தலைப்பில் உத்தியோகபூர்வமாக ஒரு முறைப்பாட்டைச் சமர்ப்பித்தது. மேலும், இது தொடர்பாக விசேட விசாரணை நடத்தவும் கோரியுள்ளது.

முறையான விசாரணை நடத்தப்பட்டு, இந்த அங்கீகரிக்கப்படாத விடுதலையில் ஈடுபட்டதாகக் கண்டறியப்பட்ட எந்தவொரு பொறுப்பான அதிகாரிகளுக்கும் எதிராக பொருத்தமான ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், ஜனாதிபதி செயலகத்தின் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.