தலைப்புச் செய்திகள்

கெகிராவ தேர்தல் அதிகாரியின் முடிவை அமுல்படுத்துவதற்கு, மேன்முறையீட்டு நீதிமன்றம் இடைக்காலத் தடை

கெக்கிராவ பிரதேச சபைத் தேர்தலில் – ஐக்கிய மக்கள் சக்தி – விகிதாசார பிரதிநிதித்துவ முறையின் கீழ் வென்ற இடங்களுக்கு, பெண் உறுப்பினர்களை நியமிக்குமாறு, கெக்கிராவ தேர்தல் அதிகாரி வெளியிட்ட கடிதத்தை அமுல்படுத்துவதை நிறுத்தி வைத்து, மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று (02) இடைக்காலத் தடை உத்தரவைப் பிறப்பித்துள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தியின் சந்திம கமகே மற்றும் ஐ.எம்.பி.கே. இலங்கசிங்க ஆகிய உறுப்பினர்கள் தாக்கல் செய்த மனுவை பரிசீலித்த பின்னர், மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி கிஹான் குலதுங்க இந்த உத்தரவைப் பிறப்பித்தார்.

ஜூன் 16 ஆம் தேதி வரை இடைக்காலத் தடை உத்தரவு அமுலில் இருக்கும் என்று மேன்முறையீட்டு நீதிமன்றம் அறிவித்துள்ளது.

கெக்கிராவ பிரதேச சபையில் ஐக்கிய மக்கள் சக்தி நான்கு இடங்களைப் பெற்றதாகவும், அவற்றில் மூன்று விகிதாசார பிரதிநிதித்துவ முறையின் கீழ் பெறப்பட்டுள்ளதாகவும் மனுதாரர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில், பட்டியல் வேட்பாளர்களாகவுள்ள பெண் வேட்பாளர்கள் விகிதாசார பிரதிநிதித்துவ முறையின் கீழ் வென்ற -மூன்று இடங்களுக்கு நியமிக்கப்பட வேண்டும் என்று, தேர்தல் அதிகாரி தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதாக மனுவில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில். இந்த மூன்று விகிதாசார பிரதிநிதித்துவ இடங்களுக்கும் பெண் உறுப்பினர்களை நியமிப்பதற்கு தேர்தல் அதிகாரி முடிவு செய்துள்ளமை, உள்ளூராட்சிச் தேர்தல் சட்டத்தின் விதிகளுக்கு முரணானது என்று மனுதாரர்கள் குறிப்பிட்டுள்ளனர். மேலும் அந்த முடிவை செல்லாததாக அறிவிக்குமாறும் மேல்முறையீட்டு நீதிமன்றத்தை கோரியுள்ளனர்.