தலைப்புச் செய்திகள்

161 உள்ளூராட்சி சபைகள் நாளை அமைக்கப்படுகின்றன

சமீபத்தில் நடந்து முடிந்த உள்ளூராட்சி தேர்தலில் – ஒரு கட்சி அல்லது சுயேச்சை குழு பெரும்பான்மை பெற்ற 161 உள்ளூராட்சி சபைகள் நாளை (02) அமைக்கப்படுகின்றன.

2025 உள்ளூராட்சி மன்றத் தேர்தல் முடிவுகள் தொடர்பாக பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் வெளியிட்ட வர்த்தமானி அறிவிப்பின்படி, உள்ளூராட்சி நிறுவனங்களின் பதவிக் காலம் நாளை ஆரம்பமாகிறது.

ஓர்அரசியல் கட்சி அல்லது சுயேச்சை குழு தெளிவான பெரும்பான்மையைப் பெற்றுள்ள 161 சபைகள், புதிய தலைவரின் கீழ் நடவடிக்கைகளைத் தொடங்கும். மீதமுள்ள சபைகள் அந்தந்த உள்ளூராட்சி ஆணையாளர்களின் கீழ் கூடும்.

எந்தவொரு கட்சியோ அல்லது குழுவோ 50% பெரும்பான்மையைப் பெறாத உள்ளூராட்சி மன்றங்களுக்கு, தலைவர் மற்றும் பிரதித் தலைவரைத் தேர்ந்தெடுப்பது நாளைய கூட்டங்களின் போது முடிவு செய்யப்படும். இது உள்ளூராட்சி ஆணையாளர்களின் தலைமையில் நடைபெறும்.

339 உள்ளூராட்சி மன்றங்களின் தேர்ந்தெடுக்கப்பட்ட மற்றும் பரிந்துரைக்கப்பட்ட உறுப்பினர்களின் பெயர்கள் – நேற்று (31)தேர்தல் ஆணைக்குழுவினால் வர்த்தமானியில் வெளியிடப்பட்டன.

161 உள்ளூராட்சி மன்றங்களில் அரசியல் கட்சிகள் அல்லது சுயேச்சைக் குழுக்கள் பெரும்பான்மையைப் பெற்றிருந்தாலும், மீதமுள்ள 178 சபைகளில் எந்த ஒரு கட்சியோ அல்லது குழுவோ முழுமையான பெரும்பான்மையைப் பெறவில்லை.

அதன்படி, சர்ச்சைகள் இல்லாத சந்தர்ப்பங்களில், அந்தந்த அரசியல் கட்சிகள் அல்லது சுயேச்சைக் குழுக்களால் பரிந்துரைக்கப்பட்ட சபைத் தலைவர்களின் பெயர்களை தேர்தல் ஆணைக்குழு வர்த்தமானியில் வெளியிட்டுள்ளது.

இந்த உள்ளூராட்சி சபைகளுக்கான உத்தியோபூர்வ பதவிக்காலம் நாளை (02) தொடங்குகிறது.