தலைப்புச் செய்திகள்

பூவரசங்குளம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி உள்ளிட்ட இருவர், லஞ்சம் கேட்ட குற்றச்சாட்டில் கைது

லஞ்சம் கோரிய குற்றச்சாட்டில் வவுனியா – பூவரசங்குளம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி உள்ளிட்ட அரச அதிகாரிகள் இருவரை – லஞ்ச ஊழல்களை விசாரிக்கும் ஆணை்குழுவினர் தனித்தனி சம்பவங்களில் கைது செய்துள்ளனர்.

முதல் நபர், மகாவலி அதிகார சபையின் ஒரு பிரிவுக்கான முகாமையாளராவார். இவர் வெலிகந்த பிரதேசத்தில் வசிக்கும் ஒருவரிடமிருந்து 20,000 ரூபாய் லஞ்சம் பெற்றுக் கொள்ள முயற்சித்த சம்பவத்தில் நேற்று (21) கைது செய்யப்பட்டார்.

அத்துகல பகுதியில் ஏற்கனவே வீட்டுவசதி கட்டுமானத்துக்காக ஒதுக்கப்பட்டிருந்த வேறு ஒரு நிலத்தை ஒதுக்குவதற்கும், 20 பேர்ச் அளவுக்கான நில அனுமதிப்பத்திரத்தை வழங்குவதற்கும் ஈடாக, குறித்த அதிகாரி லஞ்சம் கேட்டதாக முறைப்பாட்டாளர் கூறியுள்ளார்.

மற்றொரு சம்பவத்தில், வவுனியாவில் உள்ள பூவரசங்குளம் பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரி (OIC) 500,000 ரூபாய் லஞ்சம் கேட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டார்.

லஞ்சத்தின் தன்மை தொடர்பான விவரங்கள் இன்னும் விசாரணையில் உள்ளன.

பொதுமக்கள் வழங்கிய முறைப்பாட்டின் அடிப்படையில் இரு கைதுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், மேலும் விசாரணைகள் நடந்து வருவதாகவும் லஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு உறுதிப்படுத்தியுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.