தலைப்புச் செய்திகள்

தெருநாய்களால் ஏற்படும் பிரச்சினைகளுக்காக 800 மில்லியன் ரூபாய் செலவாகிறது: பிரதியமைச்சர் ஹன்சக விஜேமுனி

டுப்பூசி மற்றும் கருத்தடை திட்டங்கள் உட்பட தெருநாய்களின் பிரச்சினையை நிவர்த்தி செய்வதற்காக – ஆண்டுதோறும் அரச 800 மில்லியன் ரூபாயை செலவிடுவதாக – சுகாதார பிரதியமைச்சர் ஹன்சக விஜேமுனி நாடாளுமன்றத்தில் நேற்று (22) தெரிவித்தார்.

ரேபிஸ் நோயால் (வெறிநாய் கடி நோய்) பாதிக்கப்பட்ட தெருநாய்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மருந்துகளை வழங்குவதற்காக 280 மில்லியன் ரூபாய் செலவிடப்படுவதாகவும் அவர் கூறினார்.

விலங்குகளுக்கு தடுப்பூசி போடுவதற்கு 180 மில்லியன் ரூபாய் செலவிடப்பட்டதாகவும், இந்த திட்டத்தை முறைப்படுத்த வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

விலங்குகளுக்கு கருத்தடை செய்வதற்காக 200 மில்லியன்ரூபாய் செலவிடப்படுவதாகக் குறிப்பிட்ட ஹன்சகா விஜேமுனி; “இருப்பினும், விலங்குகளின் எண்ணிக்கையைக் குறைத்ததாகத் தெரியவில்லை என்பதால், அது குறித்து அமைச்சு மறுபரிசீலனை செய்ய வேண்டும்” என்றார்.

அவர் மேலும் கூறுகையில், இலங்கையில் ஆண்டுக்கு ரேபிஸ் நோய் காரணமாக 20-30 இறக்கின்றனர் எனவும் குறிப்பிட்டார்.

“20 ஆண்டுகளுக்கு முன்பு, இலங்கையில் கிட்டத்தட்ட 300 ரேபிஸ் தொடர்பான இறப்புகள் பதிவாகியுள்ளன. தாய்லாந்து மற்றும் லத்தீன் அமெரிக்கா போன்ற நாடுகளில், இது வருடத்திற்கு 1 முதல் 2 இறப்புகள் அல்லது இறப்புகளே இல்லாமல் போய்விட்டன. இந்த நாடுகள் விலங்கு கட்டுப்பாடு மற்றும் தடுப்பூசி திட்டம் மூலம் இதைச் சாதித்துள்ளன” என்று அவர் விளக்கினார்.

தெருநாய்கள் விடயத்தில், ரேபிஸ் நோய்க்கு சிகிச்சையளிப்பதே சுகாதார அமைச்சின் முன்னுரிமையான நடவடிக்கையாக உள்ளது என்றும் ஹன்சக விஜேமுனி மேலும் தெரிவித்தார்.