
நடந்து முடிந்த உள்ளூராட்சித் தேர்தலில் அகில இலங்கை மக்கள் சார்பாக 140 உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர் என, அந்தக் கட்சியின் தலைவர் றிஷாட் பதியுதீன் நாடாளுமன்றில் தெரிவித்தார்.
அம்பாறை, திருகோணமலை, மட்டக்களப்பு, மன்னார், வவுனியா, முல்லைத்தீவு, புத்தளம், குருணாகல், களுத்துறை, கொழும்பு, கண்டி மற்றும் அனுராதபுரம் மாவட்டங்களில் – அகில இலங்கை மக்கள் காங்கிரஸுக்கு மக்கள் ஆணை கிடைத்துள்ளன என்றும் அவர் கூறினார்.
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைமை – கடந்த காலங்களில் பல கஷ்டங்களுக்கு முகம் கொடுத்துள்ளது. அநியாயமாக பல தண்டனைகள் மற்றும் சிறைவாசங்களையும் இந்தத் தலைமைத்துவம் அனுபவித்துள்ளது.
என்றாலும் எல்லாக் குற்றச்சாட்டுகளிலிருந்தும் நிரபராதி என நீதிமன்றத்தினால் நாம் விடுவிக்கப்பட்டுள்ளோம்.
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சிக்கு வாக்களித்த மக்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
எமது கட்சி சார்பாக தெரிவு செய்யப்பட்டுள்ள உறுப்பினர்கள், சபைத் தலைவர்கள் மற்றும் பிரதித் தலைவர்கள் எதிர்காலத்தில் மக்கள் பணிகளை நேர்மையாகச் செய்வார்கள் என்பதை சொல்லிக் கொள்கிறேன்.



