தலைப்புச் செய்திகள்

ரூபவாஹினி பணிப்பாளர் மற்றும் பிரதிப் பணிப்பாளரை, ஊழியர்கள் கூச்சலிட்டு விரட்டியடிப்பு

ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் பணிப்பாளர் நாயககம் மனோஜ் நடேஷன அமரசிங்க மற்றும் பிரதி பணிப்பாளர் நாயகம் (நிர்வாகம்) தனுஜ ஆரியரத்ன ஆகியோருக்கு எதிராக ஊழியர்கள் கூச்சலிட்ட நிலையில் இன்று (21) அவர்கள் அலுவலக வளாகத்திலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.

நிறுவனத்தின் ஊழியர்களுடன் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கொண்டிருந்த ஏராளமான பிரச்சினைகளின் விளைவாக இந்த சம்பவம் நடந்ததாக, ரூபவாஹினி வட்டாரங்கள் தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

ஊழியர்களை அடிக்கடி திட்டுவது மற்றும் அவர்களை இழிவுபடுத்துவது உள்ளிட்ட பல பிரச்சினைகள் தொடர்பில் – தனுஜ ஆரியரத்னவுடன் ஊழியர்கள் பலமுறை வாக்குவாதங்களில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்படுகிறது. ரூபவாஹினியின் முன்னாள் தலைவர் செனேஷ் பண்டார திசாநாயக்கவின் காலத்தில் தனுஜ ஆரியரத்ன நியமிக்கப்பட்டார்.

பிரதிப் பணிப்பாளர் தனுஜ ஆரியரத்னவை – ரூபவாஹினியின் பணிப்பாளர் நாயகம் தொடர்ந்தும் பாதுகாத்து வந்ததால், பணிப்பாளர் நாயகம் மீதும் ஊழியர்கள் கோபமடைந்தனர்.

இந்த நிலைமை தொடர்பாக பணிப்பாளர் நாயகம் மனோஜ் நடேஷனவுடன் ஊழியர்கள் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் எனக் கோரியதையடுத், இன்று வாக்குவாதம் ஏற்பட்டது.

இதனையடுத்து – ஊழியர்கள் ஒன்றுபட்டு, பணிப்பாளர் நாயகம் மற்றும் நிர்வாகப் பிரிவுக்குப் பொறுப்பான பணிப்பாளர் நாயகம் ஆகிளேயாருக்கு எதிராக கூச்சலிட்டு, அவர்களை அலுவலக வளாகத்திலிருந்து வெளியேற்றினர்.