
முன்னாள் ராஜாங்க அமைச்சர் பிள்ளையான் எனப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிழக்கில் நடந்ததாகக் கூறப்படும் கடத்தல் வழக்கு தொடர்பாக சிஐடியினரால் தடுத்து வைக்கப்பட்டுள்ளார் என்று, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
அதேவேளை, அரசாங்கம் கூறுவது போல், ஈஸ்டர் தாக்குதல்களுடன் அவருக்குத் தொடர்புகள் இல்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
ஒருவரை கடத்துவதற்கு உதவியமை மற்றும் உடனிருந்தையாக தொடர்பான சட்டவிரோத நடவடிக்கைகளைப் புரிந்தார் எனும் குற்றச்சாட்டின் அடிப்படையிலேயே, பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் – ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க கையொப்பமிட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளார் என்று, பிள்ளையானின் வழக்கறிஞர் உதய கம்மன்பில கூறினார்.
பிள்ளையானின் கைது மற்றும் தடுப்புக்காவல் ஈஸ்டர் தாக்குதல்களுடன் தொடர்புடையது என்று, அவரைத் தடுத்து வைக்கும் உத்தரவில் எந்த வகையிலும் கூறப்படவில்லை என்று ஊடகங்களுக்களிடம் குறிப்பிட்டுள்ளார்.
2015 முதல் 2020 வரையான காலப்பகுதியில் பிள்ளையான் தடுத்து வைக்கப்பட்டிருந்ததால், ஈஸ்டர் தாக்குதல்கள் தொடர்பான தகவல்கள் அவருக்குத் தெரிந்திருக்க முடியாது என்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுட்டிக்காட்டினார்.
“அதனால், ஈஸ்டர் தாக்குதல்களின் மூளையாக இருந்தவர் பிள்ளையான் என்று யாராவது கூறினால், அது ஒரு நகைச்சுவை. ஏப்ரல் 10ஆம் திகதி பொது பாதுகாப்பு அமைச்சர் நாடாளுமன்றத்தில், ஈஸ்டர் தாக்குதல்கள் தொடர்பான விவரங்களை பிள்ளையான் வெளிப்படுத்தியதாக கூறினார். ஏப்ரல் 12ஆம் திதி, மட்டக்களப்பைச் சேர்ந்த ஒருவர் ஈஸ்டர் தாக்குதல்கள் தொடர்பாக கைது செய்யப்பட்டதாக ஜனாதிபதி கூறினார். இருப்பினும், ஏப்ரல் 13ஆம் திகதி நான் பிள்ளையானை சந்தித்தபோது, அரசாங்கம் கூறியது போல், தாக்குதல்கள் குறித்து அவர் ஒரு வார்த்தை கூட பேசவில்லை என்பது தெளிவாகத் தெரிந்தது, ”என்று உதய கம்மன்பில குறிப்பிட்டார்.
ஈஸ்டர் தாக்குதல்களுக்கு முன்னும் பின்னும் தடுப்புக் காவலில் இருந்ததால், ஈஸ்டர் தாக்குதல்கள் குறித்து பிள்ளையானுக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை என்பது தெளிவாகிறது என்று முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில மேலும் கூறினார்.
பிள்ளையானின் சட்டத்தரணியாக தான் தெரிவானமை குறித்து விளக்கிய உதய கம்மன்பில, பிள்ளையானின் சட்டத்தரணிகள் அவரைச் சந்திக்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளமையினாலேயே, இந்த முடிவை எடுத்ததாகக் கூறினார்.
“பிள்ளையானை நான் சந்தித்த போது நான்கு அதிகாரிகள் உடனிருந்தனர், இது வழக்கமான நடைமுறை அல்ல. ஒரு சட்டத்தரணிக்கும் தடுத்து வைக்கப்பட்டுள்ள அவரின் தரப்பாருக்கும் இடையிலான சந்திப்பு ரகசியமாக இருக்க வேண்டும். ஆனால், எங்களை தனியாக விட்டுவிடுமாறு அதிகாரிகளிடம் கோரிய போதிலும், அவர்கள் கோரிக்கையை நிராகரித்து எங்கள் சந்திப்பின் போது உடனிருந்தனர்” என்று கம்மன்பில குறிப்பிட்டார்.
தனது உயிரைப் பணயம் வைத்து விடுதலைப் புலிகளை தோற்கடிக்க உதவியதற்காக தனக்கு தண்டனை விதிக்கப்படுகிறதா, இன்னும் எத்தனை ஆண்டுகள் தன்னை தடுத்து வைக்கப்போகிறார்கள் என்று பிள்ளையான் கேள்வி எழுப்பி, அழுது கொண்டிருந்ததாகவும் உதய கம்மன்பில கூறினார்.
2006 ஆம் ஆண்டு கிழக்குப் பல்கலைக்கழக உபவேந்தர் கடத்தப்பட்டு காணாமல் போனமை தொடர்பாக பிள்ளையான் கைது செய்யப்பட்டு தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளார்.



