தலைப்புச் செய்திகள்

பிள்ளையானை 72 மணி நேரம் தடுத்து வைத்து விசாரிக்க நடவடிக்கை

கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் ராஜாங்க அமைச்சர் பிள்ளையான் எனப்படும் சிவநேசத்துரை சந்திரகாந்தனை 72 மணி நேரம் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்படவுள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் பிள்ளையானிடம் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் கூறியுள்ளார்.

கிழக்குப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் உபவேந்தர் பேராசிரியர் சிவசுப்பிரமணியம் ரவீந்திரநாத் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பில், பிள்ளையான் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

2006ஆம் ஆண்டு கொழும்பில் நிகழ்வொன்றில் கலந்து கொண்டு – திரும்பும் போது பேராசிரியர் ரவீந்திரநாத் கடத்தப்பட்டார்.

நாடாளுமன்றில் இன்று (09) தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் கிட்ணன் உரையாற்றியாற்றிய போது – பிள்ளையான் இவ்வாறான கடத்தல் சம்பவத்துடன் தொடர்புபட்டார் எனும் குற்றச்சாட்டின் பேரிலேயே கைது செய்யப்பட்டதாக தெரிவித்திருந்தார்.

மட்டக்களப்பில் வைத்து நேற்று (08) இரவு பிள்ளையானை குற்றப் புலனாய்வு பிரிவினர் கைது செய்தனர்.