தலைப்புச் செய்திகள்

பாகிஸ்தான் ராணுவ முகாமில் நடந்த தற்கொலை குண்டுத் தாக்குதலில் 07குழந்தைகள் உட்பட 12 பேர் மரணம்

பாகிஸ்தானின் வடமேற்கு எல்லை மாகாணமான கைபர் – பக்துன்க்வாவில் உள்ள ஒரு ராணுவ முகாமில் நேற்று (04) நடந்த தற்கொலை குண்டுவெடிப்புத் தாக்குதலில் குறைந்தது 12 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 30 பேர் காயமடைந்துள்ளனர்.

வெடிபொருட்கள் நிரப்பப்பட்ட இரண்டு வாகனங்களை தற்கொலை தாக்குதல்தாரிகள் மோதி, இந்தத் தாக்குதலை நடத்தியுள்ளனர்.

கொல்லப்பட்டவர்களில் குறைந்தது 07 குழந்தைகளும் அடங்குவர் என்று, வைத்தியசாலை தரப்பு தெரிவித்துள்ளது.

பாகிஸ்தானிலுள்ள தாலிபானுடன் தொடர்புடைய ஒரு குழு இந்தத் தாக்குதலுக்குப் பொறுப்பேற்றுள்ளது. கொல்லப்பட்டவர்களில் பாகிஸ்தான் பாதுகாப்புப் படையினரும் அடங்குவர்.

தாக்குதலுக்குப் பிறகு நடந்த துப்பாக்கிச் சண்டையில் தாக்குதல்காரர்கள் 06 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

இந்த தாக்குதலின் போது – எட்டு வீடுகள் சேதமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

ஞாயிற்றுக்கிழமை ரமலான் தொடங்கியதிலிருந்து பாகிஸ்தானில் நடந்த மூன்றாவது தாக்குதலான இந்தத் தாக்குதலுக்கு ஜெய்ஷ் அல்-ஃபர்சான் எனும் அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.

பாகிஸ்தானில் உள்ள ஒரு இஸ்லாமிய மதப் பாடசாலையில் தற்கொலை குண்டுதாரி 06 பேரைக் கொன்ற சில நாட்களுக்குப் பிறகு – இந்தத் தாக்குதல் நடந்துள்ளது.