தலைப்புச் செய்திகள்

இலங்கையில் 03 லட்சம் நாய்க்கடிகள் பதிவு: 20 பேர் றேபிஸ் நோயினால் மரணம்

இலங்கையில் வருடாந்தம் சுமார் 300,000 நாய்க்கடிகள் பதிவாகியுள்ளதாக, பொது சுகாதார கால்நடை சேவை தெரிவித்துள்ளது. இதன் காரணமாக, கடந்த ஆண்டு சுமார் 02 லட்சம் மனித வெறிநாய் தடுப்பு மருந்துகள் வழங்கப்பட்டன.

கடந்த வருடம் 20 பேர் விசர்நாய் கடி நோய் அல்லது நீர்வெறுப்பு நோயினால் (rabies) உயிரிழந்துள்ளதாக, பொது சுகாதார கால்நடை சேவையின் வைத்திய அதிகாரி டொக்டர் யேஷான் குருகே தெரிவித்துள்ளார்.

இந்த இறப்புகளில், 11 பேர் நாய் கடித்தமை காரணமாகவும், ஒருவர் மரநாய் கடித்தமை காரணமாகவும் உயிரிழந்தனர். ஏனைய 08 மரணத்துக்கு காரணமாக விலங்குகள் சரியாக அடையாளம் காணப்படவில்லை.

இவ்வாறு விலங்குக் கடிக்கு உள்ளானவர்களில் நடுத்தர வயதுடையவர்கள் முதன்மையானவர்களாவர். அரைவாசித் தொகையினர் ஆண்கள் எனத் தெரிவிக்கப்படுகிறது.

வெடிநாய் நோய்க்கு – நாய் கடி மிகவும் பொதுவான காரணமாக இருந்தபோதிலும், கடந்த பத்தாண்டுகளில் அவற்றுக்கான காரணம், படிப்படியாக குறைந்து வருகிறது. இருப்பினும், இந்த காலகட்டத்தில் குரங்குகள் மனிதர்களைக் கடிப்பது அதிகரித்துள்ளது.

இலங்கையில் வெறிநாய் நோய் (rabies) தடுப்பூசிகளுக்காக வருடாந்தம் 600 மில்லியன் செலவிடப்படுவதாகவும் டொக்டர் குருகே மேலும் தெரிவித்துள்ளார்.