
பலஸ்தீன் முழுவதும் கடந்த 24 மணித்தியாலங்களில் 34 வான்வழித் தாக்குதல்களுடன் ‘கொடூரமான குற்றங்களை’ நடத்தியுள்ள இஸ்ரேல், 71 பொதுமக்களைக் கொன்றுள்ளதாக, காஸா அரசாங்க ஊடக அலுவலகம் தெரிவித்துள்ளது.
மத்திய காஸாவில் உள்ள நுசிராத் அகதிகள் முகாமில் உள்ள குடியிருப்பு வீடு மீது, இஸ்ரேல் இரவில் நடத்திய தாக்குதலில் குறைந்தது ஐந்து பேர் கொல்லப்பட்டதாக அல் ஜசீரா செய்தியாளர்கள் கூறியுள்ளனர்.
காஸா மக்களை வெளியேறுமா இஸ்ரேல் வழங்கியுள்ள உத்தரவுகளும், பாதுகாப்பான இடங்கள் என இஸ்ரேல் அறிவித்துள்ள பகுதிகளும் – இடம்பெயர்ந்த மக்கள் மீது தாக்குதல்களை எளிதாக்க வடிவமைக்கப்பட்டுள்ளதாக, பாலஸ்தீனிய மனித உரிமைகள் குழுவான அல்-ஹக் குறிப்பிட்டுள்ளது.
இதேவேளை, காஸாவின் வைத்தியசாலைகளை இஸ்ரேல் குறிவைப்பதை ஐக்கிய நாடுகள் சபை கண்டித்துள்ளதோடு, இராணுவத் தாக்குதல்கள் மற்றும் ஊடுருவல்களின் வரம்புக்கு அப்பால் – வைத்தியசாலைகள் இருக்க வேண்டும் என்று கூறியுள்ளது.
2023 ஒக்டோபர் 07 முதல் – காஸா மீதான இஸ்ரேலின் தாக்குதலில் குறைந்தது 45,581 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளதோடு, 108,438 பேர் காயமடைந்துள்ளனர்.



