
இலங்கையின் அறுகம்பே பகுதிக்கு தமது நாட்டுப் பிரஜைகள் யாரும் செல்ல வேண்டாம் என, கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகம் ஒக்டோபர் மாதம் பிறப்பித்த பயண கட்டுப்பாட்டினை ரத்துச் செய்துள்ளது.
2024 அக்டோபர் 23 அன்று – அறுகம்பேக்கான பயணக் கட்டுப்பாடுகளை நீக்கியதாக, அறிக்கையொன்றின் ஊடாக அமெரிக்கத் தூதரகம் குறிப்பிட்டுள்ளது.
கொழும்பில் உள்ள அமெரிக்கத் தூதரகம், அனைத்து அமெரிக்க குடிமக்களையும் இலங்கைக்கான பயண ஆலோசனையை மறுபரிசீலனை செய்யவும், விழிப்புடன் இருக்கவும், அவர்களின் சுற்றுப்புறங்கள் குறித்து விழிப்புடன் இருக்கவும், சந்தேகத்திற்கிடமான நடவடிக்கைகள் மற்றும் அவசரநிலைகளை உள்ளூர் அதிகாரிகளுக்கு 119 தொலைபேசி மூலம் தெரிவிக்குமாறும் ஒரு அறிக்கையை வெளியிட்டிருந்தது.
அறுகம்பே பகுதியிலுள்ள பிரபலமான சுற்றுலா தலங்களை குறிவைத்து தாக்குதல் நடத்தப்படும் என நம்பத்தகுந்த தகவல் கிடைத்துள்ளதாக, கடந்த மாதம் இலங்கையில் உள்ள அமெரிக்க தூதரகம் தனது குடிமக்களுக்கு பயண ஆலோசனையை வழங்கியது,
இதனையடுத்து இஸ்ரேலிய சுற்றுலாப் பயணிகளின் அதிகரிப்பு மற்றும் அறுகம்பே பகுதியில் உள்ள கட்டடம் ஆக்கிரமிப்பு ஆகியவை – இவ்வாறானதொரு அறிக்கையை வெளியிடுவதற்கு அமெரிக்க தூதரகத்தை தூண்டியிருக்கலாம் என, பொலிஸ் பேச்சாளர் நிஹால் தல்துவ கூறியிருந்தார்.
அமெரிக்கத் தூதரகத்தைத் தொடர்ந்து, ஐக்கிய ராச்சியம், நியூசிலாந்து, அவுஸ்திரேலியா மற்றும் ரஷ்யா உட்பட மேலும் பல நாடுகளும் இலங்கை தொடர்பான பயண ஆலோசனைகளை புதுப்பித்தன.
பயங்கரவாத அச்சுறுத்தல்களை மேற்கோள்காட்டி, இலங்கையின் அறுகம்பே பகுதி மற்றும் நாட்டின் தெற்கு மற்றும் மேற்கில் உள்ள ஏனைய கடற்கரைப் பகுதிகளிலிருந்து உடனடியாக வெளியேறுமாறு, இஸ்ரேலியர்களுக்கு இஸ்ரேலின் தேசிய பாதுகாப்பு சபை கோரிக்கை விடுத்திருந்தது.



