தலைப்புச் செய்திகள்

அரச அறிவிப்புக்கிணங்க 50 துப்பாக்கிகள் மீளக் கையளிப்பு: தவறுவோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை

பொதுமக்களுக்கு வழங்கப்பட்ட துப்பாக்கிகள் மற்றும் வெடிமருந்துகளை தற்காலிகமாக ஒப்படைக்குமாறு விடுக்கப்பட்ட அறிவிப்புக்கு அமைவாக, 50 க்கும் மேற்பட்ட துப்பாக்கிகள் கையளிக்கப்பட்டுள்ளன என்று, பாதுகாப்பு அமைச்சு வட்டாரங்கள் தெரிவிப்பதாக செய்திகள் வெளியிடப்பட்டுள்ளன.

1916 ஆம் ஆண்டின் 33 ஆம் இலக்க ஆயுதக் கட்டளைச் சட்டத்தின் பிரிவுகள் 6 (1) மற்றும் 6 (2) இன் கீழ், பாதுகாப்புச் செயலாளருக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு இணங்க இந்த முடிவு எடுக்கப்பட்டது. மீளாய்வு நடவடிக்கையின் பின்னர் இந்த துப்பாக்கிகள் திரும்பவும் வழங்கப்படும் என அமைச்சு கூறியுள்ளது.

2024 ஆம் ஆண்டு நொவம்பர் 07ஆம் திகதிக்கு முன்னர், வெலிசர கடற்படை முகாமிலுள்ள வெடிக்கும் துப்பாக்கிகள் மற்றும் வெடிபொருட்கள் கொள்முதல் வணிக பிரிவில், தங்கள் துப்பாக்கிகள் மற்றும் வெடிமருந்துகளை சமர்ப்பிக்குமாறு பாதுகாப்பு அமைச்சு அனைத்து உரிமைதாரர்களுக்கும் அறிவித்தது.

தற்போதைய நிலைவரப்படி, கிட்டத்தட்ட 50 துப்பாக்கிகள் கையளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், பல்வேறு காரணங்களுக்காக சுமார் 1,650 துப்பாக்கி உரிமங்கள் அமைச்சினால் வழங்கப்பட்டுள்ளன.

1916 ஆம் ஆண்டின் 33 ஆம் இலக்க துப்பாக்கி கட்டளைச் சட்டத்தின் பிரகாரம், அனைத்து துப்பாக்கிகள் மற்றும் வெடிபொருட்கள் – குறிப்பிட்ட திகதிக்கு முன்னர் திருப்பித் தரப்பட வேண்டும் என்றும், இணங்கத் தவறுவோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சு வலியுறுத்தியுள்ளது.

சொத்து, பயிர், பாதுகாப்பு அல்லது விளையாட்டு நடவடிக்கைகளுக்காக வழங்கப்படும் துப்பாக்கிகளுக்கு இந்த விதிமுறை பொருந்தாது என்றும் அமைச்சு தெளிவுபடுத்தியுள்ளது.