தலைப்புச் செய்திகள்

உரிய எண்ணிக்கைக்கு அதிகமாக, மஹிந்த பாவித்த அரச வாகனங்கள் மீளப் பெறப்பட்டதாக அறிவிப்பு

நாட்டின் சட்டங்களின் கீழ் – முன்னாள் ஜனாதிபதிகளுக்கு உத்தியோகபூர்வமாக ஒதுக்கப்பட்ட எந்த வாகனங்களையும் புதிய அரசாங்கம் திரும்பப் பெறவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. இருந்த போதிலும், சட்டபூர்வமாக ஒதுக்கப்பட்ட எண்ணிக்கையைத் தாண்டிய மேலதிக வாகனங்கள் திரும்பப் பெறப்பட்டுள்ளதாக அரசாங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

இது தொடர்பில் அரசாங்க தகவல் பணிப்பாளர் நாயகம் எஸ்.எச்.கே.ஜே. பண்டார விடுத்துள்ள அறிக்கையில்; முன்னாள் ஜனாதிபதிகளான மஹிந்த ராஜபக்ஷ மற்றும் ரணில் விக்ரமசிங்க ஆகியோருக்கு, அவர்களின் உத்தியோகபூர்வ ஒதுக்கீட்டுக்கு அதிகமாக வாகனங்களை மீள ஒப்படைக்குமாறு கடிதங்கள் மூலம் அறிவிக்கப்பட்டதாக தெளிவுபடுத்தியுள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு வழங்கப்பட்ட மூன்று வாகனங்களை அரசாங்கம் மீளப் பெற்றுக்கொண்டதாகக் கூறப்படும் செய்திகள் தவறானவை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இதன்படி மஹிந்த ராஜபக்ச தனது வசம் இருந்த 16 வாகனங்களில் 08 வாகனங்களை திருப்பிக் கொடுத்துள்ளார்எ னவும், ரணில் விக்கிரமசிங்கவிடம் தற்போது 11 வாகனங்கள் உள்ளன எனவும் அரசாங்க தகவல் பணிப்பாளர் நாயகம் கூறியுள்ளார்.

1986 ஆம் ஆண்டின் 04 ஆம் இலக்க ஜனாதிபதி ஊதியச் சட்டத்தின் பிரிவு 3(2) இன் படி, இலங்கையின் முன்னாள் ஜனாதிபதிகள் மற்றும் அவர்களின் விதவை இணையர்களுக்கு ஓய்வூதியம், வீடுகள், அலுவலக ஊழியர்கள், பாதுகாப்பு மற்றும் வாகனங்கள் மற்றும் எரிபொருளுக்கான கொடுப்பனவுகள் போன்ற நன்மைகளுக்கு உரிமை உண்டு.

மேலும், அப்போதைய ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்கவினால் வெளியிடப்பட்ட கடிதத்தில் அமைச்சர்கள் மற்றும் பிரதி அமைச்சர்களுக்கு அதிகபட்சமாக மூன்று உத்தியோகபூர்வ வாகனங்கள் (கார்கள், ஜீப்கள் அல்லது இரட்டை வண்டிகள்) ஒதுக்கப்படலாம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

2023 ஆம் ஆண்டில் முன்னாள் ஜனாதிபதிகளுக்கான நலன்களுக்காக 37 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டது. அந்த வருடத்தின் முதல் அரையாண்டில் 22.6 மில்லியன் ரூபாய் செலவிடப்பட்டது.

2024 ஆம் ஆண்டிற்கான வரவு – செலவுத் திட்டம்த்தில் இவர்களுக்கான செலவு 41.28 மில்லியன் ரூபாயாக அதிகரித்தது. முன்னாள் ஜனாதிபதிகளான சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க, மஹிந்த ராஜபக்ஷ, மைத்திரிபால சிறிசேன, கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் முன்னாள் ஜனாதிபதியின் விதவை ஹேமா பிரேமதாச ஆகியோர் மாதாந்த ஓய்வூதியமாக 65,000 ரூபாய் முதல் 97,500 ரூபாய் வரை பெறுவதோடு, பிரத்தியேக செயலாளர் மற்றும் எரிபொருள் கொடுப்பனவுகளையும்பெறுகின்றனர். செயலாளர்கள் மற்றும் எரிபொருள். 2015 முதல் செப்டம்பர் 2024 க்குள், ஓய்வூதியத்துக்காக163.24 மில்லியன் ரூபாய் செலவிடப்பட்டது.

2015 முதல் 2023 நடுப்பகுதி வரையான காலப்பகுதியில் ஒதுக்கப்பட்ட153.14 மில்லியன் ரூபாய் நிதியில் 126.02 மில்லியன் ரூபாய் – தண்ணீர், மின்சார கட்டணங்கள் மற்றும் செயலாளர் சம்பளம் போன்றவற்றுக்காக செலவிடப்பட்டது.