
– மரைக்கார் –
அம்பாறை மாவட்டத்தில் முஸ்லிம் காங்கிரஸ் வேட்புமனுவில் – முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம். ஹரீஸுக்கு இடம் வழங்கினால், தாம் எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிடுவதில்லை என, முஸ்லிம் காங்கிரஸின் வேட்பாளர்களாக அடையாளப்படுத்தப்பட்டுள்ள நால்வர் உறுதியாக இருப்பதால், தற்போது வரை கட்சிக்குள் கடும் இழுபறி நிலவி வருவதாக ‘புதிது’ செய்தித்தளத்துக்கு அறிய முடிகிறது.
அம்பாறை மாவட்டத்தில் முஸ்லிம் காங்கிரஸ் – அதன் மரச்சின்னத்தில் தனித்து போட்டியிடவுள்ளதாக தீர்மானிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், அந்தக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான எச்.எம்.எம். ஹரீஸ் மற்றும் பைசல் காசிம் ஆகியோருக்கு வேட்புமனுவில் இடம் வழங்கக் கூடாது என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.
அம்பாறை மாவட்டத்தில் மு.கா சார்பில் போட்டியிடுவதற்கு முன்வந்துள்ள கிழக்கு மாகாண முன்னாள் அமைச்சர் – அட்டாளைச்சேனையைச் சேர்ந்த எம்.எஸ். உதுமாலெப்பை, கிழக்கு மாகாணசபை முன்னாள் உறுப்பினர் அக்கரைப்பற்றைச் சேர்ந்த ஏ.எல். தவம், கல்முனை மாநகர சபையின் முன்னாள் பிரதி மேயர் ரஹ்மத் மன்சூர் மற்றும் கல்முனை மாநகர சபையின் முன்னாள் மேயர் சிராஸ் மீராசாஹிப் ஆகியோர் – மு.கா தலைவர் ரஊப் ஹக்கீமிடம், இதனை வலியுறுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், ஹரீஸுக்கு வேட்புமனுவில் இடம் வழங்குவதில்லை என்றும், பைசல் காசிமுக்கு இடம் வழங்குவதெனவும் மு.கா தலைவர் – மேற்படி நால்வரிடமும் கூறி, அவர்களை இணங்கச் செய்திருந்தார்.
மேலும், இன்று (10) காலை கட்சியின் தலைமையகத்துக்கு வந்து, வேட்பு மனுவில் கையெழுத்திடுமாறும் ரஊப் ஹக்கீம் – மேற்படி நால்வரிடமும் கூறியுள்ளார்.
இதனை நம்பி, இன்று காலை கட்சியின் தலைமைகத்துக்கு மேற்படி நால்வரும் வேட்புனுவில் கையெழுத்திடச் சென்றபோது, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம். ஹரீஸின் பெயரும் வேட்புமனுவில் உள்ளதை கண்டுள்ளனர்.
இதனால், ஹரீஸுக்கு போட்டியிட சந்தர்ப்பம் வழங்கினால், தாங்கள் தேர்தலில் போட்டியிடுவதில்லை என்றும், இந்தத் தேர்தலில் கட்சிக்காக வேலை செய்யப் போவதில்லை எனவும் அவர்கள் கூறிவிட்டு, அங்கிருந்து வெளியேறியுள்ளனர்.
இதன் காரணமாக, அம்பாறை மாவட்டத்தில் முஸ்லிம் காங்கிரஸ் வேட்பாளர்களை களமிறக்குவதில் கடுமையான இழுபறி நிலவுவதாக தெரியவருகிறது.
இந்தப் பின்னணியில், மேற்படி நால்வருக்கும் பதிலாக, வேறு நால்வரின் பெயர்களை முன்னாள் எம்.பி ஹரீஸ் – கட்சியிடம் முன்வைத்ததாகவும், ஆனால் கட்சித் தலைமை அந்தப் பெயர்களை நிராகரித்து விட்டதாகவும் கூறப்படுகிறது.
தேசியப்பட்டியல் கோரிக்கை
இது இவ்வாறிருக்க, அம்பாறை மாவட்டத்தில் முஸ்லிம் காங்கிரஸ் தனித்துப் போட்டியிடுவதில் உடன்பாடு இல்லாத முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பைசல் காசிம், கட்சியின் மரச்சின்னத்தில் தான் களமிறங்கி போட்டியிட்டு, சிலவேளை தோற்றுப் போனால், தனக்கு தேசியப்பட்டியல் மூலம் நாடாளுமன்றம் செல்வதற்கான சந்தர்ப்பத்தை கட்சித் தலைமை வழங்க வேண்டுமென கோரியுள்ளதாகவும் மு.காங்கிரஸ் உள்ளக வட்டாரங்கள் கூறுகின்றன.
நாளை வெள்ளிக்கிழமை (11) நண்பகல் 12 மணியுடன் வேட்புமனுத் தாக்கல் நிறைவடையவுள்ள நிலையில், அம்பாறை மாவட்டத்தில் – யார் யாரைக் களமிறக்குவது என்பதில் – முஸ்லிம் காங்கிரசுக்குள் ஏற்பட்டுள்ள இழுபதி இன்னும் தீர்ந்தபாடில்லை.
இது இவ்வாறிருக்க, முஸ்லிம் காங்கிரஸின் அம்பாறை மாவட்ட வேட்புமனுவில் இதுவரை – சம்மாந்துறையைச் சேர்ந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஐ.எம். மன்சூர் மற்றும் பொத்துவில் பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் வாசித் ஆகியோர் மட்டுமே கையொப்பம் இட்டுள்ளனர்.



