
நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான ஏ. எச். எம். பௌசிக்கு 10 வருடங்களுக்கு ஒத்தி வைக்கப்பட்ட இரண்டு வருட கடூழிய சிறைத்தண்டனை விதித்து – கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி நவரத்ன மாரசிங்க இன்று (27) உத்தரவிட்டுள்ளார்.
அரச வாகனத்தை துஷ்பிரயோகம் செய்தமை உள்ளிட்ட 04 குற்றச்சாட்டுகளுக்காக இந்தத் தண்டனையை நீதிமன்றம் விதித்து தீர்ப்பளித்துள்ளது.
முன்னாள் அமைச்சர் பௌசி – குற்றத்தை ஒப்புக்கொண்டதையடுத்து, அவரை குற்றவாளி என நீதிமன்றம் தீர்ப்பளித்ததுடன், 04 லட்சம் ரூபாய் அபராதமாகச் செலுத்துமாறும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
அனர்த்த முகாமைத்துவ அமைச்சராக 2010 ஆம் ஆண்டு பௌசி கடமையாற்றிய போது, அமைச்சின் பேரிடர் முகாமைத்துவ நடவடிக்கைகளுக்கான சுமார் 02 கோடி ரூபாய் பெறுமதியுடைய சொகுசு வாகனத்தை, அமைச்சர் பௌசி தனது தனிப்பட்ட பாவனைக்காக பயன்படுத்தியதாக குற்றம்சாட்டப்பட்டது.
மேலும், நிதியமைச்சு வாகனத்தின் பராமரிப்புக்காக சுமார் 10 லட்சம் ரூபாய் செலவழித்ததாகவும் அவர் மீது குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.
இவை உள்ளிட்ட 04 குற்றச்சாட்டுக்களின் கீழ் – சட்டமா அதிபரால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் தீர்ப்பு இன்று வழங்கப்பட்டது.



