தலைப்புச் செய்திகள்

இலங்கையில் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தல்களின் சுவாரசியத் தகவல்கள்

இலங்கையில் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தல்களில் இதுவரை 04 பெண்கள் மட்டுமே போட்டியிட்டுள்ளனர்.

நாாடாளுமன்ற உறுப்பினரின் செயற்பாடுகளை விபரிக்கும் Manthri.lk, நாட்டின் கடந்த ஜனாதிபதித் தேர்தல்கள் தொடர்பான ஐந்து முக்கிய விடயங்களைப் பட்டியலிட்டுள்ளது. அதில்தான் மேற்படி விடயமும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதுவரை நடந்துள்ள 08 ஜனாதிபதித் தேர்தல்களின் போது, வெற்றியாளருக்கு தொடர்ச்சியாக வாக்களித்த ஒரே மாவட்டம் பொலன்னறுவையாகும்.

ஜனாதிபதித் தேர்தல்களில் வெற்றி பெற்றவர் மற்றும் இரண்டாம் இடத்தைப் பிடித்தவர்களைத் தவிர, ஜனாதிபதித் தேர்தல்களில் ஜி.ஜி. பொன்னம்பலம் (1982) & ஒஸ்வின் அபேகுணசேகர (1988) ஆகிய இருவர் மட்டுமே – ஒரு தேர்தல் பிரிவில் வெற்றி பெற்றுள்ளனர்.

1982 முதல் 2019 வரை இடம்பெற்ற தேர்தல்களில், வட-மத்திய, மேற்கு மற்றும் தெற்கு மாகாணங்கள் மட்டுமே, தமது பிராந்தியத்தில் போட்டியிட்டவர்களை ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுத்துள்ளது.

கடந்த 08 ஜனாதிபதித் தேர்தல்களில் 04 பெண் வேட்பாளர்களே போட்டியிட்டுள்ளனர். 1994 இல், சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க 60% க்கும் அதிகமான வாக்குகளைப் பெற்று இலங்கையின் முதல் பெண் ஜனாதிபதியானார்.

2005 ஜனாதிபதித் தேர்தலில்தான் – வெற்றியாளருக்கும் இரண்டாம் இடத்தைப் பிடித்தவருக்கும் இடையிலான குறைந்த வாக்கு வித்தியாசம் பதிவாகியது. ரணில் விக்கிரமசிங்கவை விட 1.86% அதிக வாக்குகளைப் பெற்று மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியானார்.