
எல்பிட்டிய பிரதேச சபைத் தேர்தலுக்கான கால அட்டவணையை – தேர்தல்கள் ஆணைக்குழு உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.
இதன்படி, வேட்பாளர்களிடமிருந்து வைப்புத்தொகை ஓகஸ்ட் 26 முதல் செப்டம்பர் 11, 2024 வரை ஏற்றுக்கொள்ளப்படும்.
இதைத் தொடர்ந்து, வேட்புமனு தாக்கல் செய்வதற்கான காலம் செப்டம்பர் 09ஆம் திகதி முதல் 12 வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
341 உள்ளூராட்சி சபைகளில் 340 சபைகளுக்கான தேர்தல்கள் 2018ஆம் ஆண்டு பெப்ரவரி 10 ஆம் திகதி நடந்தன. ஆனால், எல்பிட்டிய பிரதேச சபைக்கான தேர்தல் அடுத்த வருடமே நடைபெற்றது.
அங்கு தேர்தலில் போட்டியிடுவதற்கு சமர்ப்பிக்கப்பட்ட வேட்புமனுவொன்று நிராகரிக்கப்பட்டமைக்கு எதிராக, உச்ச நீதிமன்றில் அடிப்படை உரிமை மீறல் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டமை காரணமாக, எல்பிட்டிய பிரதேச சபைக்கான தேர்தல் தனியாக 2019 ஒக்டோபர் மாதம் நடத்தப்பட்டது.
உள்ளூராட்சி சபைகளின் பதவிக்காலம் 04 வருடங்களாகும். அந்த வகையில், எல்பிட்டிய பிரதேச சபை தவிர்ந்த ஏனைய அனைத்து சபைகளின் பதவிக் காலமும் 2022 பெப்ரவரி மாதத்துடன் நிறைவுக்கு வந்தன.
இதன் பின்னர் எல்பிட்டிய பிரதேச சபை தவிர்ந்த அனைத்து பிரதேச சபைகளுக்குமான தேர்தல் திகதி அறிவிக்கப்பட்டபோதும், அது இதுவரை நடைபெறவில்லை.
இந்தப் பின்னணியில் உள்ளூராட்சித் தேர்தலை உடனடியாக நடத்துமாறு, அண்மையில் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.



