தலைப்புச் செய்திகள்

அமைச்சர் பந்துலவின் கடன் அட்டை விவகார வழக்கு: செப்டம்பர் 27இல் விசாரணை

போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் ஊடக அமைச்சர் பந்துல குணவர்தனவுக்கு சொந்தமான கடன் அட்டையை அனுமதியின்றி பயன்படுத்தியதாகக் கூறப்படும் வழக்கு விசாரணை – செப்டெம்பர் 27ஆம் திகதி எடுத்துகொள்வதற்கு கொழும்பு மேலதிக நீதவான் மஞ்சுள ரத்நாயக்க உத்தரவிட்டுள்ளார்.

இச்சம்பவம் தொடர்பாக அமைச்சரின் முன்னாள் ஊடகச் செயலாளரை கைது செய்த குற்றப் புலனாய்வுப் பிரிவு -கடந்த இம்மாதம் 09ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இதனையடுத்து, சந்தேக நபரை தலா 05 மில்லியன் ரூபாய் பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளில் விடுவிப்பதற்கு நீதிமன்றம் அனுமதியளித்தது.

582, வெரஹர வீதி, பொரலஸ்கமுவ பகுதியைச் சேர்ந்த மகேஷ் விக்ரம என்பவரே பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

சந்தேகநபர் தனது தனிப்பட்ட தொலைபேசி இலக்கம் மற்றும் மின்னஞ்சல் முகவரியைக் பயன்படுத்தி – கடன் அட்டையிலிருந்து 05 லட்சம் ரூபாயை தனது தனிப்பட்ட பரிவர்த்தனைகளுக்குப் பயன்படுத்தியதாக, குற்றப் புலனாய்வு பிரிவின் விசேட புலனாய்வுப் பிரிவினர் நீதிமன்றில் தெரிவித்திருந்தனர்.

சந்தேக நபர் தன்னை காப்புறுதி நிறுவன முகவராக காட்டி, வைத்தியர் ஒருவர் சார்பில், ஒரு தனியார் வாகன நிறுவனத்துககு 200,000 ரூபாய் பணத்தைச் செலுத்தியுள்ளதாகவும் நீதிமன்றில் கூறப்பட்டுள்ளது.