
அரச சொத்துக்களை தம்வசம் வைத்துக் கொண்டு தவறான முறையில் பயன்படுத்துகின்றவர்கள் – அவற்றினை மீளளிக்குமாறு, லஞ்சம், ஊழல்களை விசாரிக்கும் ஆணைக்குழு உத்தரவிட்டுள்ளது.
உத்தியோகபூர்வ பதவிகளை வகிக்கும் நபர்களுக்கு அரசாங்கத்தால் வழங்கப்பட்ட அசையா மற்றும் அசையும் சொத்துக்கள் – அந்த பதவிகள் காலி செய்யப்பட்ட பின்னரும் சட்டவிரோதமாக பயன்படுத்தப்படுவதாக பல முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக அந்த ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இதனால், அத்தகைய சொத்துக்களை மீட்பதற்கான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ளுமாறு – சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அமைச்சுச் செயலாளர்கள், மாகாண தலைமைச் செயலாளர்கள், உள்ளூராட்சி மன்றங்களின் தலைவர்கள், திணைக்களத் தலைவர்கள், மாவட்டச் செயலாளர்கள் மற்றும் அரசாங்கத்துடன் இணைந்த சட்டப்பூர்வ அமைப்புகளின் தலைவர்களுக்கு லஞ்சம், ஊழல்களை விசாரிக்கும் ஆணைக்குழு இந்த அறிவிப்பை விடுத்துள்ளது.
ஊழல் தடுப்புச் சட்டத்தின் பிரிவு 41 மற்றும் 111-ன் படி, அத்தகைய சொத்தை அரசிடம் திருப்பித் தரத் தவறுவது சட்டப்படி தண்டனைக்குரிய குற்றமாகும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.



