
பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனா பதவியை ராஜிநாமா செய்து விட்டு, நாட்டை விட்டுத் தப்பிச் சென்றுள்ளார்.
ஊரடங்கு உத்தரவை புறக்கணித்த நிலையில், மக்கள் – டாக்காவிலுள்ள பிரதமரின் அரண்மனையை இன்று திங்கட்கிழமை முற்றுகையிட முயற்சித்த போது, பிரதமர் ஹசீனாா- ஒரு ராணுவ ஹெலிகொப்டரில் ஏறி தப்பிச் சென்றுள்ளார்.
பங்களாதேஷில் இடம்பெற்று வரும் வன்முறைப் போராங்களில் 300 பேர் இறந்துள்ளனர்.
பிரதமர் ஷேக் ஹசீனா – நாட்டை விட்டும் வெளியேறிய செய்தி பரவிய பின்னர், தெருக்களில் மக்கள் கொண்டாட்ட மனநிலையில் உள்ளனர்.
இந்த நிலையில் நாட்டு மக்களுக்கு ராணுவத் தளபதி ஜெனரல் வாக்கர்-உஸ்-ஜமான் ஆற்றி உரையில், பிரதமர் ராஜினாமா செய்ததையும், இப்போது ஓர் இடைக்கால அரசாங்கம் நாட்டை இயக்கும் என்பதையும் உறுதிப்படுத்தியுள்ளார்.
ராணுவத்தின் மீது மக்கள் நம்பிக்கை வைக்க வேண்டும் என்றும், இது நாட்டில் அமைதி திரும்பும் என்றும் ராணுவத் தளபதி தனது உரையில் கூறியுள்ளார்.
“போராட்டத்தின் போது நிகழ்ந்த ஒவ்வொரு மரணம் மற்றும் குற்றங்களுக்கும் நீதி வழங்கப்படுவதை நாங்கள் உறுதி செய்வோம,” என்று குறிப்பிட்ட அவர், பொறுமையைக் கடைப்பிடிக்கவும், வன்முறை மற்றும் காழ்ப்புணர்ச்சிச் செயல்களை நிறுத்தவும் பொதுமக்களுக்கு அழைப்பு விடுத்தார்.
“நாங்கள் அனைத்து முக்கிய அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளையும் அழைத்துள்ளோம், அவர்கள் எங்கள் அழைப்பை ஏற்று எங்களுடன் ஒத்துழைக்க உறுதியளித்துள்ளனர்” என்றும் ராணுவத் தளபதி மேலும் தெரிவித்துள்ளார்.



